தேடுதல்

நிக்கராகுவா திருஅவை நிக்கராகுவா திருஅவை 

திருப்பீடம்: நிக்கராகுவாவில் உரையாடலுக்கு அழைப்பு

நிக்கராகுவாவில் பொது நலன், மற்றும் அமைதியைத் தேடுவதில், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து, புரிந்துணர்வு வழிகளைக் காணுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் திருப்பீடம் அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான்

நிக்கராகுவா நாட்டின் தற்போதைய சமூக மற்றும், அரசியல் சூழல் குறித்து கவலைதெரிவித்துள்ள அதேவேளை, அந்நாட்டில் பொது நலனுக்கு உதவுகின்ற உரையாடல் இடம்பெறுமாறு, அமெரிக்க நாடுகள் நிறுவனத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Juan Antonio Cruz Serrano அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

OAS எனப்படும் அந்நிறுவனத்தில் கடந்த வாரத்தில் நிக்கராகுவா நாடு குறித்து நடைபெற்ற சிறப்பு அமர்வில் உரையாற்றிய பேராயர் Cruz Serrano அவர்கள், மக்களாட்சி, மனிதாபிமானம், மற்றும், உடன்பிறப்பு உணர்வுகொண்ட கலாச்சாரத்திற்கு இன்றியமையாத அம்சமாகிய உரையாடலுக்குத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்களோடு திருப்பீடம் எப்போதும் ஒத்துழைக்க தயாராக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் பொது நலன், மற்றும் அமைதியைத் தேடுவதில், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து, புரிந்துணர்வு வழிகளைக் காணுமாறு, அனைத்துத் தரப்பினருக்கும் திருப்பீடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் பேராயர் Cruz Serrano அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் Rodríguez Maradiaga

மேலும், நிக்கராகுவா Sandinista அரசால் அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை சில வாரங்களாக அடக்குமுறைகளை எதிர்கொண்டுவருவது குறித்து அரசை கடுமையாய்ச் சாடியுள்ள, கொன்டூராஸ் நாட்டின் Tegucigalpa பேராயர் கர்தினால் Oscar Rodríguez Maradiaga அவர்கள், நிக்கராகுவா அரசு, தலத்திருஅவை மீது ஆயுதமற்ற போர் ஒன்றை நடத்தி வருகிறது என்று குறைகூறியுள்ளார்.

ஆகஸ்ட் 14, இஞ்ஞாயிறு திருப்பலி மறையுரையில் இவ்வாறு நிக்கராகுவா அரசுக்கு எதிரான தன் கண்டனத்தைத் தெரிவித்த கர்தினால் Rodríguez Maradiaga அவர்கள், இம்மண்ணுலகிற்கு தீமூட்ட வந்த இயேசுவின் திருஅவை மீது, அரசு அநீத நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, மனித உரிமை மீறல்கள் உட்பட நிக்கராகுவா அரசின் பல்வேறு அநீத நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொதுப்படையாகப் பேசிய அந்நாட்டின் Matagalpa ஆயர், ரோலந்தோ அல்வாரெஸ் அவர்கள், பத்து நாள்களுக்கு மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2022, 16:05