தேடுதல்

IAEAவில் பேராயர் காலகர் உரையாற்றுகிறார் IAEAவில் பேராயர் காலகர் உரையாற்றுகிறார் 

IAEAவில் பேராயர் காலகர்: அணு ஆயுதங்களற்ற உலகம் இயலக்கூடியதே

IAEA நிறுவனம், குறைந்த மற்றும், நடுத்தர வருமானம்கொண்ட நாடுகளில் புற்றுநோய்க்கு தகுந்த நேரத்தில் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும், அணு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறது - திருப்பீடம்

மேரி தெரேசா: வத்திக்கான்

அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கான தன் எதிர்ப்பைத் தெரிவித்த அதேவேளை, அணு ஆயுதங்களற்ற உலகை அமைப்பது இயலக்கூடியதே என்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், உலக அணுசக்தி நிறுவனம் நடத்திய 66வது பொது அவையில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 26, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட அணு ஆயுதங்கள் ஒழிப்பு உலக நாளன்று, IAEA எனப்படும் உலக அணுசக்தி நிறுவனம் வியன்னா நகரில் நடத்திய 66வது பொது அவையில் உரையாற்றிய பேராயர் காலகர் அவர்கள், இந்த அவையில் கலந்துகொள்வோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நல்வாழ்த்தை முதலில் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் ஒழிப்பு உட்பட மனித வாழ்வை மேம்படுத்துவதற்கு IAEA நிறுவனம் ஆற்றிவரும் பணிகளுக்குத் திருப்பீடத்தின் நன்றியைத் தெரிவித்த பேராயர் காலகர் அவர்கள், இந்நிறுவனத் தலைமை இயக்குனர், உக்ரைனில் அணுப் பேரிடர் ஏற்படாதவண்ணம் அணுப்பாதுகாப்புக்கு அயராது மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு திருப்பீடத்தின் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

உலகின் பல பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற பயங்கரமான ஆயுத மோதல்கள் மற்றும், பதட்டநிலைகள், உக்ரைனில் தொடர்ந்து அதிகரித்துவரும் போர் போன்றவற்றுக்கு மத்தியில், அவற்றுக்கு தூதரகங்கள் வழியாக தீர்வுகள் காண குறைந்த அளவே இடமிருக்கின்றது, ஆயினும், உரையாடலை நாம் ஒருபோதும் விட்டுவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார், பேராயர் காலகர்.

அணு ஆயுதங்களற்ற உலகம்

அனைத்து ஆயுதங்களும் கைவிடப்படவும், அயராத கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகள் வழியாக, போருக்குக் காரணமானவைகள் ஒழிக்கப்படவும் அனைத்து நாடுகளுக்கும் திருப்பீடம் அழைப்புவிடுக்கின்றது என்று கூறியுள்ள பேராயர் காலகர் அவர்கள், அணு ஆயுதங்களற்ற உலகம் தேவையானது மற்றும், இயலக்கூடியதே  என்பதை திருப்பீடம் உறுதியாக நம்புகிறது என்றும் கூறியுள்ளார்.

இதே நோக்கத்திற்காக திருப்பீடம் அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது என்றுரைத்துள்ள பேராயர் காலகர் அவர்கள், சூழலியல், சமூக, பொருளாதார, நன்னெறி மற்றும், அரசியலில், காலநிலை மாற்றம், மற்றும், பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பெரும் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

IAEA நிறுவனத்தின் உதவி

சுற்றுச்சூழல் மாசுகேட்டை கண்காணிக்க அணு அறிவியல் மற்றும், அணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, IAEA நிறுவனம் நாடுகளுக்கு ஆதரவாய் இருப்பதையும், குறைந்த மற்றும், நடுத்தர வருமானம்கொண்ட நாடுகளில் புற்றுநோய்க் கட்டுபாட்டு யுக்திகளை வளர்த்து வருவதையும், அந்நோய்க்கு தகுந்த நேரத்தில் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும், அணு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்து வருவதையும் திருப்பீடம் பாராட்டியுள்ளது என, பேராயர் காலகர் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2022, 15:02