தேடுதல்

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அசிசி நகர் புனித பிரான்சிஸ்  

அசிசியில் “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” 3 நாள் நிகழ்வுகள்

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” - திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், நாளையப் பொருளாதாரத்திற்கான உலக இளையோர்” என்ற தலைப்பில் செப்டம்பர் 22-24ல் அசிசியில் கூட்டம்

மேரி தெரேசா: வத்திக்கான்

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” - திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், நாளையப் பொருளாதாரத்திற்கான உலக இளையோர்” என்ற தலைப்பில் இம்மாதம் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறவுள்ள நிகழ்வு குறித்து செப்டம்பர் 06, இச்செவ்வாயன்று திருப்பீட செய்தியாளர் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற குழுவின் தலைவரான அசிசி-நொச்சேரா மறைமாவட்ட பேராயர் Domenico Sorrentino அவர்கள் தலைமையிலான குழு ஒன்று இந்நிகழ்வு நடைபெறும் விதம் குறித்து இச்செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியது.

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற நிகழ்வு தொடங்கப்பட்டதற்குரிய காரணம், இந்நிகழ்வு செயல்பட்டுவரும் முறை, வருங்காலத் திட்டம், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்நிகழ்வு நடைபெற்ற விதம் போன்றவை குறித்து பேராயர் Sorrentino அவர்கள் விளக்கினார். 

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் செயலர் அருள்சகோதரி Alessandra Smerilli அவர்கள் பேசுகையில், “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்பது, ஒரு நிகழ்வு அல்ல, மாறாக, உலக அளவில் இளம் தொழில்முனைவோரை உள்ளடக்கிய ஒரு கூட்டுமுயற்சி எனவும், இவ்விளையோர் அசிசி நகரில் ஒன்றுகூடி, தற்போதைய பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொணர்வதற்கு அவர்கள் மேற்கொள்ளும்  முயற்சிகளுக்கு உந்துதல் பெறுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்”, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "Laudato Si'" அதாவது இறைவா உமக்கே புகழ், மற்றும் "Fratelli tutti" அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் ஆகிய இரு திருமடல்களின் இறைவாக்கை ஒன்றிணைப்பதாகவும் அசிசி நகர் புனித பிரான்சிசின் ஏழ்மையைத் தழுவியதாகவும் உள்ளது என்றும் அருள்சகோதரி Smerilli அவர்கள் கூறியுள்ளார்.

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” முன்வைக்கும் இறைவாக்கைச் செயல்படுத்த முயற்சிக்கும் இளம் தொழில்முனைவோருக்கு அனைவரும் ஆதரவாயிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார், அருள்சகோதரி Smerilli.

குவாத்தமாலா நாட்டு “பிரான்சிஸ் பொருளாதாரம்” அமைப்பின் பணியாளரான பத்திரிகையாளர் Lourdes Hércules, பிரேசில் நாட்டு பொருளாதார மாணவர் Tainã Santana போன்றோர் இச்செய்தியாளர் கூட்டத்தில் “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற நிகழ்வு குறித்து விளக்கினர்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 24ம் தேதி அசிசி நகர் சென்று, அந்நிகழ்வில் கலந்துகொள்ளும் இளம் தொழில்முனைவோரைச் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2022, 15:05