கோவிட்,மற்றும் போரால் அதிகரிக்கும் மனித கடத்தல் வியாபாரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
வியாபாரப் பொருள்களாக மனிதர்கள் கடத்தப்படுவது, மற்றும் நவீன உலகின் அனைத்து அடிமைத்தன வகைகளும் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டியதில், மனிதகுலமனைத்தின் ஒன்றிணைந்த நடவடிக்கைத் தேவைப்படுகிறது என விண்ணப்பித்துள்ளது திருப்பீடம்.
OSCE எனப்படும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான நிறுவனத்தின் கூட்டத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதியாக உரையாற்றிய பேரருள்திரு Mauro Lalli அவர்கள், இவ்வுலகில் ஏறக்குறைய 2 கோடியே 50 இலட்சம் மக்கள் மனித கடத்தலுக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்திலிருப்பதாகத் தெரிவித்தார்.
அக்டோபர் மாதம் 24, 25 ஆம் தேதிகளில், அதாவது, திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் ஜோர்டானில் நடத்தப்பட்ட OSCE கூட்டத்தில் பேசியபோது, கடந்த 15 ஆண்டுகளில் மனித கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டிக் கவலையை வெளியிட்டார் திருப்பீடப் பிரதிநிதி.
உலகின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்துள்ள இந்த மனித கடத்தல் வியாபாரம், அண்மைக்காலங்களில் கோவிட் பெருந்தொற்றாலும் உக்ரைன் போராலும் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டினார் பேரருள்திரு Lalli.
ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் நோக்கத்தில் மத்தியத்தரைக்கடல் பகுதியில் இந்த மனிதக் கடத்தல்கள் அதிக அளவில் இடம்பெறுவதால், இதைத்தடுப்பதற்கென இப்பகுதி நாடுகளிடையே அதிக அளவு ஒத்துழைப்புத் தேவைப்படுவதையும் எடுத்துரைத்தார் திருப்பீடப் பிரதிநிதி.
அரசுகளுக்கிடையே மட்டுமல்ல, சமூகங்கள், மத அமைப்புக்கள், மதத்தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும் இதில் தேவை என்பதை சுட்டிக்காட்டிய பேரருள்திரு Lalli அவர்கள், இக்கடத்தல்களால் பாதிக்கப்பட்ட மக்களிடையே மத அமைப்புக்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு திருப்பீடத்தின் நன்றியையும் வெளியிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்