தேடுதல்

 திருத்தந்தையுடன் பேராயர்  Gabriele Giordano Caccia திருத்தந்தையுடன் பேராயர் Gabriele Giordano Caccia 

மனிதமாண்பில் மதிப்பீடுகளில் அனைவரும் சமம் - பேராயர் CACCIA

"எல்லா மனிதர்களும் விடுதலை, மாண்பு, மற்றும் உரிமை கொண்டு சமமாகப் பிறந்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டு கொண்டு செயல்பட வேண்டும்.- பேராயர் Caccia

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலகத்தில் வாழ்கின்ற மக்கள் வேறுபட்ட திறன்களையும் வளங்களையும் கொண்டிருந்தாலும் மனித மாண்பிலும் மதிப்பீடுகளிலும் சமமானவர்கள் எனவும்,  இது நடைமுறைப்படுத்தப்படாதபோது,  மனித உரிமைகளும்  சுதந்திரங்களும்  புறக்கணிக்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளார் பேராயர் Gabriele Caccia.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில்  மனித உரிமைகளவையின் 77 வது பொதுப் பேரவை நடைபெற்று வரும் வேளையில் அதன் மூன்றாம் அமர்வில்  மனித உரிமைக்காப்பு விதிகளை செயல்படுத்துதல் பற்றி பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ஐ.நா.விற்கான நிரந்தர திருப்பீட பிரதிநிதி, பேராயர் Caccia. 

மனிதஇயல்பிலேயே  உள்ள மாண்பை அரசிடமிருந்தோ அல்லது வேறு எந்த நபரிடமிருந்தோ  கிடைக்கும்  சலுகையாக ஒருபோதும் கருத முடியாது என்றும், கடந்த ஆண்டுகளில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், மற்றும் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது  என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Caccia.   

பெரும்பாலான மனித உரிமைக்காப்புச் செயல்பாடுகள் நாடுகளால் செயல்படுத்தப்பட்டாலும், அதை உறுதியாக பின்பற்றுவதற்கான சவால்கள் அதிகமாக உள்ளன என்றும், மனித உரிமைகளுக்கான முழு மரியாதையை உறுதி செய்ய மனித மாண்போடு செயல்படும் அடிப்படைக் கொள்கைக்கு நாம் திரும்புவது அவசியம் என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் Caccia.

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் எடுக்கப்படும்  அனைத்து முயற்சிகளின் தொடக்கப் புள்ளியாக மனித உரிமைகளின் உலகளாவிய ஒப்பந்த அறிக்கையின்  முக்கியக் கொள்கையான, "எல்லா மனிதர்களும் விடுதலை, மாண்பு, மற்றும் உரிமை கொண்டு சமமாகப் பிறந்தவர்கள்" என்பதை கருத்தில்   கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பேராயர் Caccia.  .

மனிதாபிமானமும் மனித மாண்பும் அனைத்து மனிதர்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்தி  மனித உரிமைக்காப்பு விதிச் செயல்பாடுகளை  நடைமுறைப்படுத்துவதற்கான வழியைக் காட்டுகின்றன எனவும்,  மனித உரிமை என்பது தனிப்பட்ட நபர்களுக்கும் மனித குடும்பத்திற்கும் சொந்தமானது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை, ஒன்றிப்பு என இரண்டும் மனித வாழ்விற்கு  மிக அவசியமானவை என்றும், ஒன்றின்றி மற்றொன்று தனியாக செயல்பட முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் Caccia. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2022, 14:08