வத்திக்கான்: பெருவிற்கு பழங்கால 3 உடல்கள் ஒப்படைப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
பெரு நாட்டின் இஸ்பானிய கலாச்சாரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்த பழங்கால, பதப்படுத்தப்பட்ட மூன்று உடல்களை வத்திக்கான் அந்நாட்டிற்குத் திருப்பி வழங்குவது குறித்த ஒப்பந்தம், அக்டோபர் 17 இத்திங்களன்று கையெழுத்திடப்பட்டது.
தென் அமெரிக்க நாடான பெருவின் வெளியுறவு அமைச்சர் César Landa Arroyo அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த நிகழ்வையொட்டி, இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கலாச்சாரங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்கும் நோக்கத்தில் வத்திக்கான் அருங்காட்சியகத்தில் Anima Mundi Ethnological அருங்காட்சியகம் 1925ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் தூண்டுதலின் பேரில் வடிவமைக்கப்பட்டபோது இந்தப் பழங்கால பதப்படுத்தப்பட்ட உயிரற்ற மூன்று உடல்களை பெரு நாடு, வத்திக்கானுக்கு கொடுத்துதவியது.
வத்திக்கான் அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த வரலாற்றுக்கு முந்தைய, அதாவது இருபது இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆயிரக்கணக்கான கலைவடிவங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பெரு நாட்டிற்கு, இம்மூன்று உடல்களை திருப்பி வழங்குவது குறித்த ஒப்பந்தத்தில் வத்திக்கான் நாட்டு நிர்வாகத்தின் தலைவர் கர்தினால் Fernando Vérgez அவர்களும், பெருவின் வெளியுறவு அமைச்சர் César Landa Arroyo அவர்களும் அக்டோபர் 17, இத்திங்களன்று கையெழுத்திட்டனர்.
கலாச்சாரத்தைப் போற்றுதல்
இது குறித்து அறிக்கை வெளியிட்ட வத்திக்கான் அருங்காட்சியகம், அமேசான் நதியின் Ucayali கிளை நதி பாயும் பகுதியில், பெரு நாட்டு ஆன்டெஸ் மலைப்பகுதிகளில் மூவாயிரம் மீட்டர் உயரத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த உடல்கள் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக அவை பெருவிடம் ஒப்படைக்கப்படுகின்றன என அறிவித்துள்ளது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்