தேடுதல்

பஹ்ரைன் திருத்தூதுப் பயணம் பஹ்ரைன் திருத்தூதுப் பயணம் 

பஹ்ரைன் திருத்தூதுப் பயணம், அமைதியின் திருப்பயணம்

அனைத்து மதத்தவரும், பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும், நாட்டவரும் நம் பொதுவான மனித உடன்பிறந்த உணர்வைக் கண்டுகொள்ள பஹ்ரைன் திருத்தூதுப் பயணம் அழைப்புவிடுப்பதாக அமைந்திருந்தது - கர்தினால் தாக்லே

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பஹ்ரைன் நாட்டுத் திருத்தூதுப் பயணம், ஒரு திருப்பயணம் என்று, பஹ்ரைனில் திருத்தந்தை நிறைவேற்றிய நிகழ்வுகள் அனைத்திலும் பங்குகொண்ட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.

பஹ்ரைனில் திருத்தந்தையோடு எல்லா இடங்களுக்கும் சென்று எல்லா நிகழ்வுகளிலும் பங்குபெற்ற பிலிப்பீன்ஸ் நாட்டவரான கர்தினால் தாக்லே அவர்கள், இத்திருத்தூதுப் பயணம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இத்திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை ஆற்றிய ஒவ்வோர் உரையிலும் கடவுள் மற்றும், இறைவேண்டல் குறித்தே பேசினார், ஏனெனில், நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் மற்றும், ஒருவர் ஒருவரோடு தொடர்புள்ளவர்கள் என்பதை, அவரின் கண்களால் பார்த்தால் மட்டுமே காண முடியும் என்று கூறியுள்ளார், கர்தினால் தாக்லே.  

பஹ்ரைன் திருத்தூதுப் பயணம்
பஹ்ரைன் திருத்தூதுப் பயணம்

பஹ்ரைனில் திருத்தந்தை, என்றென்றும் நிலைத்திருக்கும் மரபுரிமையை விட்டுவந்துள்ளார் என்றும், அமைதியின் திருப்பயணமான இத்திருத்தூதுப் பயணம், பல்சமய உரையாடல், பாரசீக வளைகுடாப் பகுதியிலுள்ள சிறுபான்மை கத்தோலிக்கரை கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதிப்படுத்துவது ஆகிய இரு முக்கிய கூறுகளைக் கொண்டிருந்தது என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

அனைத்து மதத்தவரும், பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும், நாட்டவரும் நம் பொதுவான மனித உடன்பிறந்த உணர்வைக் கண்டுகொள்ள இத்திருத்தூதுப் பயணம் அழைப்புவிடுப்பதாக அமைந்திருந்தது என்று கூறியுள்ளார், கர்தினால் தாக்லே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2022, 15:55