பஹ்ரைன் திருத்தூதுப் பயணம், ஒன்றிப்பு, உரையாடலின் அடையாளம்
வரலாற்றின் துயர்நிறைந்த இக்காலக்கட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பஹ்ரைன் நாட்டுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், ஒன்றிப்பு மற்றும் உரையாடலின் அடையாளமாக உள்ளது என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
நவம்பர் 03, வருகிற வியாழன் முதல் 06, ஞாயிறு வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்பதற்கு, பஹ்ரைன் நாடு தன்னை தயாரித்துவரும் இவ்வேளையில், அத்திருத்தூதுப் பயணம் குறித்து வத்திக்கான் ஊடகத்திற்குப் பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், பஹ்ரைனுக்கு வருமாறு திருத்தந்தையை அழைத்த அரசர் Ḥamad bin ʿĪsā Āl Khalīfa அவர்களுக்கும், தலத்திருஅவைக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
பதட்டநிலைகள், எதிர்ப்புகள், மற்றும், போர்களால் நிறைந்துள்ள ஓர் உலகில் பஹ்ரைனில் திருத்தந்தை நிறைவேற்றவிருக்கும் நிகழ்வுகள், ஒன்றிப்பு, நல்லிணக்கம், மற்றும், அமைதியின் செய்தியைக் கொண்டவையாக இருக்கும் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
திருத்தூதுப் பயணம் நடைபெறக் காரணம்
லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழ், வத்திக்கான் வானொலி, வத்திக்கான் செய்திகள் ஆகிய மூன்று வத்திக்கான் ஊடகங்களுக்கு ஒன்றாகப் பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை ஒருவர் பஹ்ரைனுக்கு மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணமாக அமைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திருத்தூதுப் பயணம் எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்விக்கு முதலில் பதிலளித்துள்ளார்.
பஹ்ரைன் அரசரின் சொந்த அழைப்பு, அமைதியான நல்லிணக்கத்திற்கான உரையாடல் அவை நடத்தும் கூட்டம், அப்பகுதி திருத்தூது நிர்வாகி ஆயர் பால் ஹின்டரின் அழைப்பு ஆகியவையே இத்திருத்தூதுப் பயணம் நடைபெறக் காரணம் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவாலி நகரில் அமைதியான நல்லிணக்கத்திற்கான உரையாடல் அவையில் திருத்தந்தை உலகுக்கு வழங்கவிருக்கும் செய்தி குறித்து கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருப்பீடச் செயலர், கிழக்கும் மேற்கும் உரையாடல் நடத்துவதற்கும், உண்மையில், பல்வேறு இனம், கலாச்சாரம், மற்றும், மதங்களைக் கொண்டிருக்கும் பஹ்ரைன் ஒன்றிணைந்து வாழ்வதுபோல் எல்லா நாடுகளும் வாழ்வதற்கும் அழைப்புவிடுப்பதாக அமைந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அமைதியான நல்லிணக்கத்திற்கான உரையாடல் அவையில் திருத்தந்தை பங்குகொள்வது, அபு தாபியில் அவர் மேற்கொண்ட பயணத்தை நினைவுக்குக்கொணர்கின்றது என்றும், பஹ்ரைன் திருத்தூதுப் பயணம், கஜகஸ்தான், ஈராக், மொராக்கோ, எகிப்து, அஜர்பைஜான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப்பயண நிகழ்வுகளை இணைக்கின்றதாக உள்ளது என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
திருப்பீடத்திற்கும், பஹ்ரைனுக்கும் இடையேயுள்ள உறவு
பஹ்ரைனில் இஸ்லாம் முக்கிய மதமாகவும், கத்தோலிக்கர் சிறுபான்மையினராகவும் உள்ளவேளை, திருப்பீடத்திற்கும், பஹ்ரைனுக்கும் இடையேயுள்ள உறவு குறித்தும் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இரண்டாயிரமாம் ஆண்டில் இவ்விரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டன என்றும், அரசு அதிகாரிகள், கத்தோலிக்கருடன் எப்போதும் மதிப்புடன் நடந்து ஒத்துழைப்பு தருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அவாலியில் இவ்வாண்டில் அர்ச்சிக்கப்பட்டுள்ள அரேபிய அன்னை மரியா பேராலயத்தின் அடிக்கல்லுக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவின் செங்கல் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்கொடையாக அளித்துள்ளது பற்றியும், இது அந்நாட்டின் கத்தோலிக்கர் மீது திருத்தந்தை கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.
இத்திருத்தூதுப் பயணத்தில் பஹ்ரைன் நாட்டின் மனாமா, அவாலி (Manama Awali) ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருக்கும் திருத்தந்தை, அவாலியில் "உரையாடலுக்கான பஹ்ரைன் அவை: மனித நல்லிணக்கத்திற்கான கிழக்கு மற்றும் மேற்கு" என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுவார். மேலும், பஹ்ரைன் தேசிய அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றுவதும், திருஇருதயப் பள்ளியில் இளையோரைச் சந்திப்பதும் திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளாகத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்