தேடுதல்

புனிதர் அனைவர் புனிதர் அனைவர்  

உரோம் நகரில் புனிதர்களின் வாழ்வு குறித்த கருத்தரங்கு

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் தலைமைப்பணி காலத்தில் 450க்கும் மேற்பட்டோரை புனிதர்களாகவும், ஏறத்தாழ 1300 பேரை அருளாளர்களாகவும் அறிவித்துள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

“புனிதத்திற்கு எடுத்துக்காட்டுகள் மற்றும், Divinus Perfectionis Magister திருத்தூதுக் கொள்கைத் திரட்டு வெளியிடப்பட்டதிலிருந்து 40 ஆண்டுகளில் நடைபெற்ற புனிதர்பட்டங்கள்” என்ற தலைப்பில், உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கு குறித்து நவம்பர் 08, இச்செவ்வாயன்று மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.    

நவம்பர் 9, இப்புதன் முதல் 11, வெள்ளி வரை, புனிதர் படிநிலைகளை கண்காணிக்கும் திருப்பீடத் துறையும், வரலாற்று அறிவியல் திருப்பீடத் துறையும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்குக் குறித்து, இவ்வரலாற்றுத் துறையின் தலைவர் அருள்பணி Bernard Ardura அவர்களும், புனிதர் படிநிலைகளை கண்காணிக்கும் திருப்பீடத் துறையின் வரலாறு பிரிவின் ஆலோசகர் பேராசிரியர் Bernard Dompnier அவர்களும் செய்தியாளர் கூட்டத்தில், விவரித்தனர்.

நம்மைப் போன்று சதையும் குருதியும்கொண்ட, புனிதர்களின் வாழ்வில் கடவுள் செயல்பட்ட முறை குறித்து நாம் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அவர்களின் வாழ்வை நாம் வாசிக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது, இக்கருத்தரங்குக்குத் தொடக்கமாக இருக்கின்றது என்று அருள்பணி அர்தூரா அவர்கள் கூறியுள்ளார்.

புனிதர்பட்ட படிநிலைகளை எளிமையாக்குவதற்கு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களும் குறிப்பாக, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களும்  கொண்டுவந்த சீர்திருத்தங்களுக்குப் பின்னர், அருளாளர்கள் மற்றும், புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என்றும், அருள்பணி அர்தூரா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், புனிதர் படிநிலைகளைப் புதுப்பித்தல் குறித்து 1983ஆம் ஆண்டில் வெளியிட்ட Divinus Perfectionis Magister என்ற திருத்தூது கொள்கைத் திரட்டு குறித்தும் எடுத்துரைத்த அருள்பணி அர்தூரா அவர்கள், இத்திருத்தந்தை தனது தலைமைத்துவப் பணி காலத்தில், 450க்கும் மேற்பட்டோரை புனிதர்களாகவும், ஏறத்தாழ 1300 பேரை அருளாளர்களாகவும் அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் தலைமைப்பணி காலத்திலிருந்து கடந்த நாற்பது ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ள புனிதர்கள் மற்றும், அருளாளர்கள் குறித்தும், மறைச்சாட்சிகள், துறவியர், பொதுநிலையினர், திருத்தந்தையர், மருத்துவர்கள், சிறார், வளரிளம்பருவத்தினர் எனப் பல்வேறு நிலையினராக இவர்கள் இருப்பதும் குறித்தும் இக்கருத்தரங்கில் கலந்துரையாடல்கள் நடைபெறும் என்றும் அருள்பணி அர்தூரா அவர்கள் அறிவித்துள்ளார்.

இப்புனிதர்கள் வாழ்ந்த பல்வேறு மத மற்றும், கலாச்சார சூழல்கள் பற்றியும், வாழும் திருஅவை, கடவுளோடு உள்ள உறவு, நம்பிக்கையாளர்களின் வாழ்வு போன்றவை பற்றியும் இவர்கள் நமக்கு எடுத்துரைப்பது குறித்தும் திருஅவையின் வாழ்வில் உயிர்த்துடிப்புடன் வாழ இவர்கள் நமக்கு உதவுவது குறித்தும் இக்கருத்தரங்கில் கருத்துக்கள் பரிமாறப்படும் என்றும், அருள்பணி அர்தூரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2022, 13:53