உக்ரைனுக்கு கப்பல் நிறைய மனிதாபிமான உதவிகள்
மேரி தெரேசா: வத்திக்கான்
இரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால், உக்ரைனில் மின்இணைப்புகள் சேதமாக்கப்பட்டுள்ளவேளை, அந்நாட்டில் கடுங்குளிரால் துன்புறும் மக்களுக்கு அக்குளிரைத் தாங்கும் மேலாடைகள் மற்றும், மின்ஆற்றலை இயக்கும் கருவிகளுடன் அந்நாட்டிற்குச் சென்றுள்ளார், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski.
ஒரு கப்பல் நிறைய மின்ஆற்றலை இயக்கும் நாற்பது கருவிகள் மற்றும், கடுமையான குளிரைத் தாங்கும் ஆடைகளுடன் உக்ரைனின் மேற்குப் பகுதியிலுள்ள Lviv நகருக்கு டிசம்பர் 19, இத்திங்கள் மாலையில் சென்றுள்ளார் கர்தினால் Krajewski.
திருப்பீட பிறரன்புப் பணித் துறையின் தலைவரான கர்தினால் Krajewski அவர்கள், அத்துறையால் சேகரிக்கப்பட்ட இப்பொருள்களை டிசம்பர் 20 இச்செவ்வாயன்று உக்ரைனில் இரஷ்யாவின் கடுமையான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள Kyiv, Zaporizhzhia, Odesa ஆகிய நகரங்கள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனியர்களுக்குத் தேவையான கூடுதலான பொருள்கள் இச்செவ்வாயன்று லாரிகளில், போலந்து நாட்டிலிருந்து உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்