பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்கியா மக்களோடு தோழமை
மேரி தெரேசா: வத்திக்கான்
இவ்வாண்டு நவம்பர் 26ம் தேதி, இத்தாலியின் இஸ்கியாத் தீவில் பெருவெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றுள்ளார், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Konrad Krajewski.
நேப்பிள்ஸ் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள இஸ்கியாத் தீவிலுள்ள Casamicciola Terme நகரை டிசம்பர் 08, இவ்வியாழனன்று பார்வையிட்டுள்ள கர்தினால் Krajewski அவர்கள், வேதனையை அகற்ற முடியாது, ஆனால் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
தூய கன்னி மரியாவின் அமல உற்பவப் பெருவிழாவன்று இச்சந்திப்பு இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பாட்டிகள், மற்றும், பெண்களின் கண்களில், தன் மகனின் இறுதி மூச்சுவரை உடனிருந்த அன்னை மரியாவின் துயரத்தைக் காண முடிந்தது எனவும் கர்தினால் Krajewski அவர்கள் தெரிவித்துள்ளார்.
இஸ்கியாத் தீவில் இடம்பெற்ற நிலச்சரிவில் தங்கள் பெற்றோரை இழந்த ஆறு வயதே நிரம்பிய Michele, Francesco, Maria Teresa ஆகிய மூன்று சிறாரின் உறவினர்களை முதலில் சந்தித்தார் கர்தினால் Krajewski.
மேலும், அத்தீவில் நிலச்சரிவு மற்றும், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திருத்தந்தையின் செபங்களையும் தோழமையுணர்வையும் தெரிவித்துள்ளார், கர்தினால் Krajewski.
இஸ்கியாத் தீவில் 2015ஆம் ஆண்டில் இதே மாதிரியான இயற்கைப் பேரிடர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்