தேடுதல்

மாற்றுத்திறனாளிகள், திருஅவை குழுமங்களுக்கு வளங்கள்

ஒருங்கிணைந்து பயணம் என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பின்புலத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீடத் துறை 2வது காணொளியை வெளியிட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

மாற்றுத்திறனாளிகள், திருஅவை குழுமங்களுக்கு எவ்வகையில் உதவுகிறார்கள் என்பதை எடுத்துரைக்கும் நோக்கத்தில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீடத் துறை, திருஅவை நம் இல்லம் என்ற தலைப்பில் காணொளிகளை வெளியிட்டு வருகிறது.

ஒருங்கிணைந்து பயணம் என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பின்புலத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இத்திருப்பீடத் துறை ஏற்கனவே காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளவேளை, டிசம்பர் 15, இவ்வியாழனன்று இரண்டாவது காணொளியை வெளியிட்டுள்ளது.

“எழுந்திரு மற்றும், நட” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள 2வது காணொளியில், உலக சிறப்பு மாமன்ற அவையில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுக்கும்போது, தாங்கள் திருஅவை குழுமங்களுக்கு எவ்வாறு உரியவர்கள் என்பது பற்றியும், நற்செய்தியோடு தொடர்புகொள்கையில் எதிர்பாராத வழிகளில் அது எவ்வாறு புதிய சக்தியை தங்களுக்கு அளிக்கிறது என்பது பற்றியும் அவர்கள் விவரிப்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சக்கர நாற்காலியில் இருப்பதிலேயே முடங்கிவிடாமல், அந்நிலையிலும் நற்செய்தியை அறிவிக்கும் கடமை தனக்கு இருப்பது குறித்து Enrique Alarcón Garcia என்பவர்  இக்காணொளியில் விவரித்துள்ளார்.

ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்வது குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, உலகளாவியத் திருஅவையில் நடைபெற்றுவரும் நடவடிக்கைகள், மாற்றுத்திறன்களோடு திருஅவையின் வாழ்வில் முழுமையாகப் பங்குகொள்ளவும், தங்களின் தனித்துவமான அழைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன என்றும் கார்சியா அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2022, 14:21