திருஅவை அமைதியின் கனவை உயிரோடு வைத்திருக்கிறது - பேராயர் காலகர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
உக்ரைன் நாட்டின் அமைதிக்காக உரையாடல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்து திருப்பீடத்தால் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் நாட்டின் அமைதிச்சூழலுக்கானக் கனவை திருஅவை இன்னும் கொண்டிருக்கின்றது என்றும் கூறினார் பேராயர் காலகர்.
பிப்ரவரி 24 வெள்ளிக்கிழமை இரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு முடிவிற்கு வந்ததையொட்டி, நாட்டின் போர்ச்சூழல், திருப்பீடத்தின் உதவிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு பதிலளித்தார் திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
உரையாடல், அமைதி, மற்றும் நல்லிணக்கம் பற்றி பேசுவது எல்லாருக்கும் கடினம் என்றாலும், இது திருஅவை, திருப்பீடம் மற்றும் திருத்தந்தையால் தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும், இத்துன்பத் தருணத்தில், பலரின் சிரமங்களை நாம் புரிந்துகொண்டு, அமைதிக்கான கனவை மனதில் கொண்டு செயல்படவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.
உக்ரேனிய மக்களுடன் நெருக்கமாக இணைந்து, அமைதிக்கான இலக்கை உருவாக்குவது. அமைதி மற்றும் உரையாடலுக்கு வழிவகுக்கும் என்றும், அமைதிக்கு வழிவகுக்கும் எந்தவொரு உரையாடலுக்கும் நம்பிக்கையைத் திறக்கிறோம் என்றும் கூறிய பேராயர் காலகர், கடந்த மே மாதம் உக்ரைனுக்கு அவர் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்து, மக்களின் துன்பம் தன்னை அழமாக மாற்றியதாகவும் எடுத்துரைத்தார்.
கியேவில் தங்கியிருந்தது உக்ரேனிய மக்களின் துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாகவும், போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அமைதியை நிலைநாட்டவும், திருஅவையின் முயற்சிகளை செயல்படுத்தவும் உதவியாக இருந்ததாக கூறிய பேராயர் காலகர், இந்த பயங்கரமான போருக்கு ஒரு முடிவு இருக்கும், அந்த முடிவு விரைவில் வரும் என்று நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.
ஐரோப்பியக் கண்டத்தில் நடக்கும் இப்போர், இரண்டாம் உலகப் போரின் அனுபவத்திற்குப் பிறகு, மீண்டும் ஒருபோதும் போர் நடக்காது என்று நினைத்த ஐரோப்பியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நீண்ட வரலாறு, பல கலாச்சார அம்சங்கள், சமயப் பரிமாணம் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளும் இரு நாடுகளுக்கிடையேயான சிக்கலான போர் என்றும் கூறினார்.
எல்லா போர்களும் பயங்கரமானவை எனினும் இந்த போர் நம் அனைவருக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வைக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்