திருவழிபாட்டு முறை தூயஆவியின் செயலிலிருந்து தொடங்க வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
வழிபாட்டு முறை என்பது உயிரினங்கள் கடவுளின் படைப்பை நோக்கித் திரும்புவதற்கான மிகச்சிறந்த நேரம் என்பதால், அதில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் தூயஆவியிலிருந்து தொடங்க வேண்டும் என்றும், புனித உணர்வை முற்றிலுமாக இழந்துவிட்டால், நம்பிக்கையின் செயல் துளிர்விடும் நிலமும் காலநிலையும் காணாமல் போய்விடும் என்றும் கூறினார் கர்தினால் Raniero Cantalamessa.
மார்ச் 24 வெள்ளிக்கிழமை தவக்காலத்திற்கான நான்காம் வாரச் சிந்தனையை “MYSTERIUM FIDEI!” On the Liturgy, அதாவது திருவழிபாட்டில் நம்பிக்கையின் மறைபொருள்” என்ற கருப்பொருளில் வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் வழங்கியபோது இவ்வாறு கூறினார் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தியான சிந்தனைகளை வழங்கிவரும் கர்தினால் Raniero Cantalamessa.
வழிபாட்டு முறை என்பது நற்செய்தி நம்மை எதை நோக்கி இட்டுச்செல்கிறது என்பதற்கான அடித்தளம், மையப்புள்ளி என்றும், நற்செய்தியில் கூறப்படும் உவமையில், எல்லாரையும் விருந்துக்கு அழைக்க வேலையாட்கள் தெருக்களிலும் சந்துக்களிலும் அனுப்பப்படுவது போல, ஆலய விருந்து மண்டபத்தில் நற்கருணை என்னும் ஆண்டவரின் திருவிருந்து (1 கொரி 11:20) தயாரிக்கப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Cantalamessa.
புனித உணர்வை முற்றிலுமாக இழந்துவிட்டால், நம்பிக்கையின் செயல் துளிர்விடும் நிலமும் காலநிலையும் நம்மில் காணாமல் போய்விடும் என்றும், இது மதச்சார்பின்மையின் மிக மோசமான விளைவு, "புனிதத்துவத்தின் பற்றாக்குறை, அலட்சியம், மற்றும் நவீன உலகின் ஆழமான அடையாளம்" என்ற சார்லஸ் பெகுய் என்பவரின் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தார் கர்தினால் Cantalamessa.
மக்களுக்கு கடவுளைப் பற்றிய உண்மையான அனுபவம், மற்றும் ஆழ்நிலையை அனுபவிக்கும் சிறப்புமிக்க இடமாக ஆலயங்கள் செயல்பட முயற்சிப்போம் என்றும், கத்தோலிக்க வழிபாட்டு முறை ஒரு வலுவான, புனிதமான மற்றும் அருள்பணியாளர் அடையாளத்துடன் கூடிய ஒரு செயலில் இருந்து மக்கள் பங்கேற்பு அதிகமாகக் காணப்படும் முறையாக மாறியதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் Cantalamessa.
ஆண்டவரின் திருவிருந்தை, தூய்மையான அருளடையாளங்களின் அனுபவமாக, தனிப்பட்ட விதத்தில் மட்டுமன்றி சமூக அளவிலும் அமைதியின் வழியாகப் பெற முடியும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Cantalamessa.
தவநிலை அமைதி, மறைபொருள் அமைதி எனும் இரண்டு வகையான அமைதிகள் உள்ளன என்று எடுத்துரைத்த கர்தினால் Cantalamessa அவர்கள், கடவுளால் படைக்கப்பட்ட உயிரினம் கடவுளை நோக்கி எழ முயலும் அமைதி, தவநிலை அமைதி என்றும், படைப்பை நெருங்கும் கடவுளால் தூண்டப்படும் அமைதி, மறைபொருள் அமைதி என்றும் விளக்கினார்.
ஒற்றுமை உடன்படிக்கைக்குப் பின்வரும் அமைதி பற்றி செப்பனியா இறைவாக்கினரின் (1:7), கடவுளாகிய ஆண்டவரின் முன்னிலையில் அமைதி! என்பதை நினைவு கூர்ந்த கர்தினால் Cantalamessa அவர்கள், திருநற்கருணை உட்கொண்டவுடன் கிறிஸ்துவுடனான தனிப்பட்ட தொடர்பின் தருணத்தை நீட்டிக்க நாம் அமைதியில் செபிக்கின்றோம் என்பதையும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்