தேடுதல்

PAMI தலைவர் அருள்பணி Stefano Cecchin. PAMI தலைவர் அருள்பணி Stefano Cecchin. 

அன்னை மரியாவின் காட்சி தொடர்பான நிகழ்வுகளுக்கான கண்காணிப்பகம்

கண்காணிப்பகத்தின் மத்திய அறிவியல் குழு பொறுப்பாளர்களுள் ஒருவராக தமிழ்நாட்டைச் சார்ந்த அருள்பணி டென்னிஸ் குழந்தைசாமி (ம.ஊ.ச) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகில் அன்னை மரியாவின் காட்சி மற்றும் புதுமை நிகழ்வுகளுக்கான கண்காணிப்பகத்தை உருவாக்கி அதற்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாக தெரிவித்தார் PAMI எனப்படும் வத்திக்கானின் பன்னாட்டு மரியியல் நிறுவனத்தின் தலைவர் அருள்பணி Stefano Cecchin.

ஏப்ரல் 13 வியாழனன்று வெளியிடப்பட்ட செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள Cecchin அவர்கள், அன்னை மரியா தொடர்பான புதுமை நிகழ்வுகளுக்கான ஆய்வு, அங்கீகாரம், சரியான பரவல் ஆகியவற்றிற்கு உறுதியான ஆதரவை வழங்குவதற்காக இக்கண்காணிப்பகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

அக்கண்காணிப்பகத்தின் மத்திய அறிவியல் குழு பொறுப்பாளர்களுள் ஒருவராக தமிழ்நாட்டைச் சார்ந்த மரியின் ஊழியர் சபை அருள்பணி டென்னிஸ் குழந்தைசாமி (ம.ஊ.ச) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள வீரவநல்லூரில் பிறந்த அருள்பணி டென்னிஸ் அவர்கள், உரோமையில் உள்ள Angelicum,  Urbanianum  பல்கலைக்கழகங்களில் மரியியல் பேராசிரியராகவும், உரோமில் உள்ள மரியானும் பல்கலைக்கழகத்தின் முதல்வராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். ஆயர் மாமன்றத்திற்கான தயாரிப்புக் குழுவின் உறுப்பினர், வத்திக்கானின் பன்னாட்டு மரியியல் நிறுவனத்தின் ஆலோசகர் என பல சிறப்புமிக்க பணிகளை திறம்பட செய்து கொண்டிருப்பவர் அருள்பணி டென்னிஸ்.

அருள்பணி டென்னிஸ் குழந்தை சாமி ம. ஊ. ச
அருள்பணி டென்னிஸ் குழந்தை சாமி ம. ஊ. ச

புதுமை நிகழ்வுகளின் நம்பகத்தன்மை தொடர்பான திருஅவை அதிகாரத்தின் அறிவிப்புக்காக பல ஆலயங்கள் காத்திருக்கின்ற நிலையில் அதனைப் பகுப்பாய்வு செய்து விளக்குவதும் இக்கண்காணிப்பகத்தின் முக்கிய நோக்கம் என்றும், ஏப்ரல் 15, சனிக்கிழமையன்று PAMI தலைமையகத்தில் தனது முதல் கூட்டத்துடன் அதிகாரப்பூர்வமாக தனது நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் தெரிவித்தார் அருள்பணி Cecchin.

திருஅவையின் அன்னையான மரியா, இரக்கத்தின் தாயாக, அமைதியின் அரசியாகப் போற்றப்படுபவர் என்றும், அன்னையின் இத்தகைய ஒருங்கிணைந்த உயர் பண்புகளைக் குறைத்து மதிப்பிடுவது அச்சத்தையும் எதிர்ப்பையும் விதைப்பதால் சில வழக்குகளை கையாள்வதற்கு போதுமான தயாரிப்பு மற்றும் பயிற்சியை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும் கூறினார் PAMIயின் தலைவர் அருள்பணி Cecchin

மத்திய அறிவியல் குழுக்கள் போன்று உள்ளூர் அறிவியல் குழுக்களும் அந்தந்த மாவட்ட அளவில் விரைவில் உருவாக்கப்படும் என்றும், ஒரு செயல்பாட்டு வலையமைப்பின் வரம்பை அதிகமாக நீட்டித்து செயல்படுவது, தேவைகள் அல்லது ஆதரவு கோரிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வு நடந்த இடத்தை சந்தித்து செயல்படுவது போன்றவற்றை இக்கண்காணிப்பகத்தால் செய்ய இயலும் என்றும் அருள்பணி Cecchin கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2023, 13:50