தேடுதல்

திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின். திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின்.   (ANSA)

உரையாடல் மற்றும் அறிவின் கதவுகளைத் திறக்கும் பாலம்

அணுகுதல், தன்னை வெளிப்படுத்துதல், செவிமடுத்தல், ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ள முயற்சித்தல் பிரச்சனைகளுக்கான முற்றுப்புள்ளிகளைத் தேடுதல் போன்றவற்றில் உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

சுவர்கள் அமைப்பதை விட, பாலங்கள் கட்டுவது எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான மிக சவாலான செயல் என்றும், ஒற்றுமை, ஒருமைப்பாடு, உரையாடல் மற்றும் அறிவுக்கான கதவுகளைத் திறக்கும் உறவின் பாலங்களை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின்.

ஜூன் 17 சனிக்கிழமை ஸ்லோவேனியாவில் நடைபெற்ற உரையாடல் மற்றும் அமைதிக்கான கூட்டத்தின்போது இவ்வாறு கூறியுள்ள திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், மக்களின் உரிமை மற்றும் மரியாதையைக் காக்க தேசிய சமூகங்கள் உதவவேண்டும் என்ற திருப்பீடத்தின் கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.

சுவர்களுக்குப் பதிலாக பாலங்களைக் கட்ட முயலுங்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அறிவுறுத்தலை வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், பிரிக்கின்ற, சிதைக்கின்ற, தன்னை மறைக்கின்ற எல்லைக்குள் தன்னை மூடுகின்ற சுவர்களைக் கட்டாது, இணைக்கின்ற, வளர்க்கின்ற, வெளிப்படுத்துகின்ற மற்றும் எல்லைகளை விரிவுபடுத்துகின்ற பாலங்களை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

அமைதிக்கான இன்றியமையாத நிபந்தனையாக, மதங்களுக்கு இடையிலான உரையாடல், விருந்தோம்பல், அர்ப்பணிப்பு, சந்திப்பின் கலாச்சாரம் ஆகியவற்றின் முக்கிய கூறுகளில் ஒன்றாக உள்ளது என்றும், அணுகுதல், தன்னை வெளிப்படுத்துதல், செவிமடுத்தல், ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ள முயற்சித்தல், பிரச்சனைகளுக்கான முற்றுப்புள்ளிகளைத் தேடுதல் போன்றவற்றில் உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் எடுத்துரைத்துள்ளார்.

ஓர் ஆழமான நல்லிணக்கப் பணியை ஊக்குவிப்பதற்காக கத்தோலிக்கம், ஆர்த்தடாக்ஸ், முஸ்லீம் ஆகிய மூன்று சமூகங்களின் மக்களுக்கும்  மதத்தலைவர்களுக்கும் மீண்டும் மீண்டும் வேண்டுகோள்விடுத்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் வரிகளை மேற்கோள் காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், வளர்ந்து வரும் புதிய ஐரோப்பாவில் ஒன்றிணைந்து வாழும் பல்வேறு மக்களிடையே அமைதி மற்றும் சந்திப்பு கலாச்சாரத்தைத் தேடும் நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸின் வார்த்தைகளான, மோதல் கலாச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதை நினைவுகூர்ந்த கர்தினால் பரோலின் அவர்கள், புவியியல் காரணங்களுக்காக மட்டுமின்றி, வரலாறு மற்றும் கலாச்சார காரணங்களுக்காகவும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்திருப்பதாக உணரும் மேற்கு பால்கன் நாடுகள் சந்திப்பு கலாச்சாரத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2023, 11:32