ஏழைகளை ஏற்று ஆதரிப்போம் : பேராயர் ஃபிசிக்கெல்லா
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலக ஏழைகள் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தியானது 'ஏழைகளுக்கு மனிதாபிமானத்தைக் காட்டுங்கள்' என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா
ஜூன் 13, இச்செவ்வாயன்று, ஏழைகளின் பாதுகாவலரான பதுவை நகர் புனித அந்தோணியாரின் திருவிழாவன்று, உலக ஏழைகள் தினத்திற்கான சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள வேளை, அதுகுறித்து வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலின்போது இவ்வாறு கூறியுள்ளார் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா.
ஏழைகள் என்பவர்கள் எண்ணிக்கையல்ல, மாறாக, அவர்களும் மனிதர்கள் என்பதை எடுத்துக்காட்டி, பொருளாதார உதவியோடு மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களின் நிகழ்ச்சி நிரல்களில் இருந்து தொடங்கி நட்பை ஊட்டுவதன் வழியாக அவர்களை வரவேற்கவும் ஆதரிக்கவும் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் ஃபிசிக்கெல்லா.
உண்மையில், திருத்தந்தை மருத்துவமனையில் இருக்கும்போதே நமக்கு இந்தச் செய்தியைத் தருகிறார் என்பதையும், இதன்வழியாக, ஏழை மக்கள் பலருடன் துன்பத்தைப் பகிர்ந்து கொள்கிறார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது என்றும் இந்நேர்காணலின்போது கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் ஃபிசிக்கெல்லா.
துன்ப துயர்களைச் சந்தித்த தோபித்து தன் ஏழ்மை நிலையை ஏற்றுக்கொண்டதுடன் அதன் வழியாக மற்றவர்களின் ஏழ்மை நிலையை உணர்ந்தவராக அவர்களுக்கு உதவினார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிந்தனைகளை நினைவுகூர்ந்துள்ள பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாகவே விவிலியக் கதை மாந்தரான தோபித்து உலக ஏழைகள் தினத்திற்கான கதாபாத்திரமாகத் திருத்தந்தையால் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நமக்கு வழங்கும் இச்செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால், முதலில் ஒரு தந்தை தனது மகனுக்கு விட்டுச் செல்லும் சாட்சியம்தான் இது என்று திருத்தந்தை அவர்கள் நமக்கு எடுத்துரைக்கின்றார் என்று கூறியுள்ள பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், நம்மால் மறக்க முடியாத முக்கியமான உள்ளடக்கங்களின் பரிமாற்றம் இதில் உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் இச்செய்தியில் ஏழைகளுக்கான கவனம் அதிகம் இருக்கிறது என்றும், இது சொல்லாட்சிக் கவனம் அல்ல. தம்மை அணுகிய ஒவ்வொரு நோயாளருக்கும், திரளான மக்களுக்கும், அவர்களுக்கு இருந்த ஆழமான தேவையைப் பார்த்து பதிலளித்த இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, ஒவ்வொரு நபரையும் தொடும் கவனம் இது என்றும் விளக்கியுள்ளார் பேராயர் ஃபிசிக்கெல்லா.
இங்கே, ஏழைகள் என்பது ஒரு புள்ளிவிவரம் குறித்த எண் அல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் நமது நெருக்கத்தையும் மனிதநேய உணர்வையும் விரும்பும் மக்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறியுள்ளார் பேராயர் ஃபிசிக்கெல்லா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்