வத்திக்கான் தகவல் பரிமாற்றத்தின் பரிணாமம் பற்றிய புதிய புத்தகம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜூன் 13, இச்செவ்வாயன்று, உரோமையிலுள்ள LUMSA பல்கலைக்கழகத்தில், வத்திக்கான் தகவல் பரிமாற்றத்தின் பரிணாமம் பற்றிய புதிய புத்தகம் முதன்முதலாக வழங்கப்பட்டதாக வத்திக்கான் செய்தித் தெரிவித்துள்ளது.
‘திருச்சங்கம் முதல் வலைத்தளம் வரை, வத்திக்கான் தகவல்தொடர்பு மற்றும் சீர்திருத்தத்தின் திருப்புமுனை’ என்று இத்தாலிய மொழியில் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூல், பல ஆண்டுகளாக வத்திக்கான் தகவல்தொடர்புகளில் முக்கியப் பங்காற்றிய Angelo Scelzo அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
இந்நூல் வழங்கும் விழாவில், வத்திக்கானின் தற்போதைய தகவல் தொடர்புத் துறையின் தலைவர் Paolo Ruffini, இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Matteo Zuppi மற்றும், வத்திக்கான் ஊடகத்துறையில் அனுபவமிக்க இயேசு சபை அருள்பணியாளர் Federico Lombardi ஆகியோர் கலந்துகொண்டனர்.
Scelzo அவர்கள் எழுதியுள்ள இந்த நூல், வத்திக்கான் தகவல்தொடர்பு சீர்திருத்தத்தின் பரந்த அளவிலான மற்றும் தெளிவான ஆய்வு, எப்போதும் அதிகரித்து வரும் சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்து பேசுவதுடன் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும், திருப்பீடத்தின் தொடர்பு வழி எதிர்கொள்ளும் முக்கிய சவால்களையும் அவர் விவரிக்கின்றது.
மேலும் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் தகவல் பரிமாற்றம் முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆளுகை வரையிலான இந்தப் பயணத்தின் பல்வேறு குறிப்பிடத்தக்க நிலைகளையும் விளங்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியரான Angelo Scelzo.
இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள இயேசு சபை அருள்பணியாளர் Federico Lombardi அவர்கள், வரலாற்றை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை அதில் குறிப்பிட்டுள்ளதுடன், சீர்திருத்தத்தின் அவசியம், திருஅவையின் பணியில் உறுதிசெய்யப்படும் நம்பிக்கை, தகவல் தொடர்பின் ஒருங்கிணைந்த பணி ஆகியவை பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்நூல் ஆசிரியர் Angelo Scelzo, திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன், திருப்பீடச் செய்தித் தொடர்பு அலுவலகத்தின் துணை இயக்குநராக 2016-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அதற்கு முன்பு வத்திக்கான் தகவல்தொடர்புகளில் மற்ற பதவிகளையும் வகித்தார். மேலும் L'Osservatore Romano செய்தித்தாளின் துணை இயக்குனராகவும், இரண்டாயிரத்தின் மாபெரும் யூபிலி ஆண்டிற்கான தகவல் தொடர்புத் தலைவராகவும், சமூகத் தொடர்புகளுக்கான பாப்பிறை அமைப்பின் துணைச் செயலாளராகவும் பணியாற்றினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்