தேடுதல்

கர்தினால் மத்தேயோ ஷூப்பி  கர்தினால் மத்தேயோ ஷூப்பி  

அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் கர்தினால் ஷூப்பி சந்திப்பு

கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, இரஷ்யா உக்ரைன்மீது தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியதிலிருந்து அந்நாட்டிற்கு ஏறத்தாழ 19,000 உக்ரேனிய குழந்தைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகத் திருத்தந்தையின் சிறப்புத் தூதரும்  இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயோ ஷூப்பி  அவர்கள், இரஷ்யாவிற்குக் கொண்டுசெல்லப்பட்ட உக்ரேனிய குழந்தைகளைத் திரும்ப அழைத்து வருவதற்கான வத்திகானின் பணிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

ஜூலை 18, இச்செவ்வாயன்று, மாலை 5 மணிக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்றும், இது ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நீடித்தது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்புக் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டு அரசுத் தலைவர் பைடன்  அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொடர்ச்சியான பணி மற்றும் உலகளாவிய அவரின் தலைமைக்கான தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார் என்றும், அண்மையில் அமெரிக்கப்  பேராயர் ஒருவரை கர்தினாலாக நியமித்ததை வரவேற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனில் இரஷ்யாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பால் ஏற்படும் பரவலான துன்பங்களுக்குத் தீர்வு காண மனிதாபிமான உதவிகளை வழங்கும் திருப்பீடத்தின் முயற்சிகள் பற்றியும் இருவரும் கலந்துரையாடினர் என்றும் அவ்வறிக்கைத் கூறுகின்றது.

கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24 -ஆம் தேதி, இரஷ்யா உக்ரைன்மீது தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியதிலிருந்து இரஷ்யாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட ஏறத்தாழ 19,000 உக்ரேனியக் குழந்தைகளைத் திரும்பக் கொண்டு வருவதற்கான  வத்திக்கானின் பணிகள் பற்றியும் அவ்விருவரும் விவாதித்ததாகவும் அவ்வறிக்கைத் தெரிவிக்கின்றது.

இரஷ்யாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள உக்ரேனிய குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று உக்ரைன் கூறும் வேளை, கியேவ் (ஜூன் 5-6) மற்றும் மாஸ்கோ (ஜூன் 28-30) ஆகியவற்றிற்கான அவரது முந்தைய பயணங்களின் போது ஏற்கனவே இதைக் குறித்து கர்தினால் ஷூப்பி அவர்கள் பேசியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஜூலை 17, இத்திங்களன்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகமும், உக்ரைனில் அமைதியை மேம்படுத்துவதற்காக கர்தினால் ஷூப்பி அவர்கள் வாஷிங்டனுக்கு செல்வார் என்று அறிவித்திருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2023, 13:50