இடம்பெயர்ந்தோரை இதயத்தால் அடையாளப்படுத்துங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இடம்பெயர்வுகளையும் இடம்பெயர்ந்தோரையும் நமது சத்தங்களால் அல்ல மாறாக நம் இதயங்களால் அடையாளப்படுத்த வேண்டும் என்றும், புலம்பெயர்தல் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை என்பதை திருத்தந்தை நமக்கு நினைவூட்டுகிறார் என்றும் கூறினார் பவுலோ ருபீனி
2013 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லம்பாதுஸாவிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு கூறினார் திருப்பீட சமூக தொடர்புத் துறையின் தலைவர், பவுலோ ருபீனி.
எல்லாவற்றையும் நம்மால் திட்டமிட முடியாது, ஆனால் என்ன நடக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்றும், நம் இதயத்தால் கேட்கவும் பார்க்கவும் வேண்டும் என்றும் கூறினார் பவுலோ ருபீனி.
துன்பம் மற்றும் வறுமையின் காரணமாக சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் மேல் அதிக கவனம் செலுத்தும் திருத்தந்தை இதனையேத் தனது தலைமைத்துவத்தின் கருப்பொருளாகவும் கொண்டு செயல்படுகின்றார் என்று எடுத்துரைத்த ருபீனி அவர்கள், கடலில் மூழ்கி இறந்துபோன புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறுதல் அடைய திறந்தவெளியில் திருப்பலி நிறைவேற்றி கடலில் மலர் வளையம் வீசி திருத்தந்தை அஞ்சலி செலுத்தியதையும் நினைவுகூர்ந்தார்.
"இடம்பெயர்வு ஒரு சிக்கலான பிரச்சினை" என்ற திருத்தந்தையின் வரிகளை எடுத்துரைத்த ருபீனி அவர்கள், சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் உள்ளன என்று நினைக்கப் பழகிவிட்டோம், இருப்பினும் உலக வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இடம்பெயர்தலை எவ்வாறு நிர்வகிப்பது என்பது உண்மையான கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுப்பப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்