மதச் சின்னங்கள் இழிவுபடுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது
மெரினா ராஜ் – வத்திக்கான்
மதச்சின்னங்கள் மற்றும் புனித தலங்கள் இழிவுபடுத்தப்படுவதும், தாக்கப்பட்டு அழிக்கப்படுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருப்பீடம் வலியுறுத்துகின்றது என தெரிவித்துள்ளார் பேரருள்திரு John David Putzer.
அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது அமர்வில், ஜூன் மாத இறுதியில் ஸ்வீடனில் முஸ்லீம் மதத்தாரின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதைக் குறித்து பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார் ஐநா மற்றும் அனைத்துலக அமைப்புகளுக்கான திருப்பீடக் குழுவின் முதன்மைச் செயலர் பேரருள்திரு John David Putzer.
மத வெறுப்புணர்வைத் தூண்டும் பொதுச் செயல்களின் அதிகரிப்பு குறித்துப் பேசிய பேரருள்திரு புட்சர் அவர்கள், ஈத் அல்-ஆதா விடுமுறையின் முக்கியத்துவம் இழிவுபடுத்தப்படுதல் பற்றியும், கருத்து சுதந்திரத்தின் நன்மையை வீணாக உபயோகிக்க வேண்டாம் என்பது பற்றியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு சமூகத்தால் புனிதமானதாகக் கருதப்படும் எந்தவொரு புத்தகமும் அதன் நம்பிக்கையாளர்களுக்கு மரியாதை செலுத்துவதன் வழியாக மதிக்கப்பட வேண்டும் என்ற திருத்தந்தையின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த பேரருள்திரு புட்சர் அவர்கள், கருத்துச் சுதந்திரம் மற்றவர்களை இகழ்வதற்கான ஒரு செயலாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், இதை அனுமதிப்பது நிராகரிக்கப்படவும் கண்டிக்கப்படவும் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உண்மை, பொருள், வாழ்க்கையின் நோக்கம் ஆகியவையே மனிதத்தேடலின் வெளிப்பாடாகும் என்று கூறிய பேரருள்திரு புட்சர் அவர்கள், வேண்டுமென்றே மத நம்பிக்கைகள், மரபுகள் மற்றும் புனிதப் பொருள்களை அவமதிப்பது, அதை விசுவசிக்கும் மக்களின் மாண்பின் மீதான தாக்குதலை உருவாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
கருத்துச் சுதந்திரம் என்னும் விலைமதிப்பற்ற பரிசை தவறாகப் பயன்படுத்தி, சமமற்ற எதிர்வினையைத் தூண்டுகிறார்கள் என்று கூறிய பேரருள்திரு புட்சர் அவர்கள், இதனைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு தேவை என்றும் ஏற்கனவே போர் மற்றும் மோதல்களால் வெறுப்பு, மற்றும் வன்முறைக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்துவது போல மனித உடன்பிறந்த உறவு இந்நேரத்தின் காயங்களுக்கு மருந்தாக அமையும் என்றும் எடுத்துரைத்தார்.
திருக்குரானை இழிவுபடுத்தும் செயல்கள் உட்பட, மத செயல்பாடுகளுக்கான பாதுகாப்பற்ற சூழலைக் கண்டித்து அதனை உறுதியாக நிராகரிக்கும் தீர்மானத்திற்கு பலர் ஒப்புதல் அளித்தனர். இந்த உரைக்கு ஆதரவாக 28 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் பெறப்பட்டன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்