தேடுதல்

பேராயர் கப்ரியல் காச்சா பேராயர் கப்ரியல் காச்சா  

விண்வெளியின் அமைதி பயன்பாட்டுக்கு பன்னாட்டு ஒத்துழைப்பு அவசியம்

ஐக்கிய நாடுகள் அவையில், விண்வெளியின் அமைதியான பயன்பாட்டில் பன்னாட்டு ஒத்துழைப்பு குறித்த திருப்பீடத்தின் கருத்துப் பகிர்வு.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

ஐ.நா.விற்கான நிரந்தர திருப்பீட பிரதிநிதி பேராயர் கப்ரியலே காச்சா அவர்கள், கடந்த ஆண்டுகளில் விண்வெளி நடவடிக்கைகளின் விரைவான வளர்ச்சியை எடுத்துக்கூறி, விண்வெளியில் அரசின் செயல்பாடுகள், அமைதிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடனும், மனிதகுலத்தின் பொது நன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், ஒரு பகிரப்பட்ட பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும், விண்வெளி ஆய்வுகள் முன்னேறும்போது, அதன் பலன்கள் அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளுக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும், ஏனெனில், விண்வெளியின் வணிகப் பயன்பாடு, தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்காமல், ஒருங்கிணைந்த வளர்ச்சி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமைக்கான தளமாக செயல்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார் பேராயர் காச்சா.

விண்வெளி நடவடிக்கைகளால் உருவாகும் குப்பைகள் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற காரணத்தால், இதுபோன்ற ஆபத்தைத் தணித்து, குறைந்த புவி சுற்றுப்பாதை மற்றும் விண்வெளியின் மிகவும் தொலைதூர பகுதிகள் இரண்டையும் பாதுகாப்பது, விண்வெளிப் பயணம் செய்யும் அனைத்து நாடுகளின் கூட்டுக் கடமையாகும் என குறிப்பிட்டார்.

திருத்தந்தை ஆறாம் பவுல் 1968 ஆம் ஆண்டு கூறியுள்ளது போல், விண்வெளி ஆய்வு மூலம் வழங்கப்படும் வளங்களை மனிதகுலத்தின் நலனுக்காக பயன்படுத்துதல் என்பது அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்கான நீதிக்காகவும் ஒரே நேரத்தில் வேலை செய்வதாகும் என்பதை மேற்கோடிட்டு, அனைத்து நாடுகளும் விண்வெளியை ஆராய்தல் மற்றும் பயன்படுத்துவதைப் போலவே ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புடன்  மதிப்புகளை மறுஒழுங்கமைக்குமாறு திருப்பீடம் அழைப்பு விடுப்பதாகவும் ஐ.நா. கூட்டத்தில் பேராயர் காச்சா தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2023, 15:01