உலகலாவியத் திருஅவை அனைவருக்கும் செவிசாய்க்க வேண்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தற்போது வத்திக்கன் நகரில் இடம்பெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒப்புதலுடன் இறைமக்களுக்கான கடிதம், அக்டோபர் 25, இப்புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது.
அன்பான சகோதரர் சகோதரிகளே, 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வின் செயல்பாடுகள் முடிவடையும் நிலையில், நாங்கள் வாழ்ந்த அழகான மற்றும் வளமான அனுபவத்திற்காக உங்கள் அனைவரோடும் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் அதன் பங்கேற்பாளர்கள்.
உங்களின் எதிர்பார்ப்புகள், கேள்விகள் மற்றும் அச்சம் ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு உங்கள் இறைவேண்டலால் நாங்கள் ஆதரிக்கப்பட்டோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டது போல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செவிசாய்த்தல் மற்றும் தேர்ந்துதெளிதளுக்கான நீண்டதொரு செயல்முறை தொடங்கப்பட்டது என்றும், கடவுளின் அனைத்து மக்களுக்குமான திருஅவையாக, தூய ஆவியாரின் வழிகாட்டுதலின் கீழ் ஒன்றிணைந்து பயணிக்க மறைபரப்பின் சீடர்கள் இயேசுவின் வழியை பின்பற்றுவதில் தங்களையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
ஒன்றாக, நமது பணிகள், பண்புநலன்கள் மற்றும் பணிகளின் நிரப்புதலில், நாங்கள் கடவுளுடைய வார்த்தையையும் மற்றவர்களின் அனுபவத்தையும் தீவிரமாகக் கேட்டோம். ஆவியாரின் வழியில் உரையாடலைப் பயன்படுத்தி, ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் எங்கள் சமூகங்களின் வளமையையும் வறுமையையும் நாங்கள் தாழ்மையுடன் பகிர்ந்து கொண்டோம், தூய ஆவியானவர் இன்று திருஅவைக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை அறிய முயல்கிறோம் என்றும் உரைத்துள்ளனர்.
இலத்தீன் பாரம்பரியத்திற்கும் கிழக்கு கிறிஸ்தவத்தின் மரபுகளுக்கும் இடையில் ஒருவருக்கொருவர் பரிமாற்றங்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நாம் அனுபவித்திருக்கிறோம் என்றும், மற்ற திருஅவைகள் மற்றும் திருச்சபை சமூகங்களின் சகோதர பிரதிநிதிகளின் பங்கேற்பு எங்கள் விவாதங்களை ஆழமாக வளப்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒரு நெருக்கடியான உலகத்தின் சூழலில் எங்கள் கூட்டம் நடந்தது, அதன் காயங்களும் அவதூறான ஏற்றத்தாழ்வுகளும் எங்கள் இதயங்களில் வலியுடன் எதிரொலித்தன என்றும் உரைத்துள்ள மாமன்றத்தின் உறுப்பினர்கள், கொடிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் இறைவேண்டல் செய்தோம், இடம்பெயர்விற்குக் காரணமான துன்பம் மற்றும் ஊழலால் கட்டாயப்படுத்தப்பட்ட அனைவரையும் மறக்கவில்லை என்றும், நீதி மற்றும் அமைதியைக் கட்டியெழுப்ப பாடுபடும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுடன் எங்கள் ஒன்றிப்பையும் அர்ப்பணிப்பையும் உறுதி செய்தோம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
திருத்தந்தை அழைப்பின் பேரில், ஒருவருக்கொருவர் செவிமடுப்பதற்கும், தூய ஆவியாரில் ஒற்றுமைக்கான விருப்பத்தை வளர்ப்பதற்கும் அமைதியான சூழலுக்குக் குறிப்பிடத்தக்க இடமளித்தோம் என்றும் கூறியுள்ள மாமன்றத்தின் உறுப்பினர்கள், சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மௌன சிந்தனையில் ஒற்றுமைக்கான தாகம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை தொடக்க கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு செபத்தின் போது அனுபவித்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள், மேய்ப்புப்பணி மற்றும் மறைப்பணி மாற்றத்திற்கான அழுத்தமான அழைப்பை நாங்கள் உணர்ந்தோம் என்றும், கடவுள் உலகை அன்புகூர்ந்த எல்லையற்ற பிறரன்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் வழியாக நற்செய்தியை அறிவிப்பதே திருஅவையின் பணியாகும் (காண். யோவான் 3:16) என்றும் எடுத்துக்காட்டியுள்ளனர் உறுப்பினர்கள்.
புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ள இல்லமற்ற மக்களிடம் இந்த ஆயர்கள் மாமன்றத்தின்போது திருஅவைக் குறித்த எதிர்பார்ப்புகள் குறித்துக் கேட்டபோது, ‘அன்பு’ என்றே அவர்கள் பதிலளித்தனர் என்று சுட்டிக்காட்டியுள்ள உறுப்பினர்கள், இந்த அன்பு எப்போதும் திருஅவையின் தீவிர இதயமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுநிலையினர், பெண்கள் மற்றும் ஆண்கள், அனைவரும் தங்கள் திருமுழுக்கின் வழியாக அர்ப்பண வாழ்வு வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதற்குத் திருஅவை செவிசாய்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் திருஅவையானது குடும்பங்கள், அவர்களின் கல்வி குறித்த அக்கறைகள், இன்றைய உலகில் அவர்கள் வழங்கும் கிறிஸ்தவ சாட்சிகள் ஆகியவற்றிற்கு செவிசாய்க்க வேண்டும் என்றும், பொதுப்பணிகளில் ஈடுபட விரும்புவோர் மற்றும் தேர்ந்துதெளித்தல் மற்றும் முடிவெடுக்கும் கட்டமைப்புகளில் பங்கேற்க விரும்புபவர்களின் குரலை அது வரவேற்க வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளனர்.
நாம் அன்புகூரவும், பணியாற்றவும் அழைக்கப்பட்டுள்ள இவ்வுலகமானது, தன் முரண்பாடுகளின் மத்தியிலும் கூட, திருஅவை தனது பணியின் அனைத்து பகுதிகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கோருகிறது என்றும், இந்த அழைப்புக்குப் பதிலளிக்க நாம் அச்சம்கொள்ள தேவையில்லை. ஒன்றிணைந்த பயணத்தில் முதன்மையாக இருக்கும் திருஅவையின் அன்னை மரியா நமது திருப்பயணத்தில் நமக்குத் துணையாக வருகிறார். மகிழ்ச்சியிலும் துயரத்திலும், அவர் தன் மகனைக் காட்டி நம்மை நம்பும்படி அழைக்கிறார். அவரே இயேசு, நம் ஒரே நம்பிக்கை! என்று கூறி இக்கடிதத்தை நிறைவு செய்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்