தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துரையாடல் உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துரையாடல்   (ANSA)

உலகலாவியத் திருஅவை ஏழைகளுக்கானது

அக்டோபர் 21, சனிக்கிழமை காலை, 35 பணிக்குழுக்களின் அறிக்கைகள் பன்னிரண்டாவது அமர்வின் முடிவில், ஆவணப் பணிகளின் தொகுதி B3 தொடர்பாக தலைமைச் செயலகத்திற்கு வழங்கப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அக்டோபர் 21, இச்சனிக்கிழமையன்று நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின்போது பங்கேற்பாளர்கள் அன்று மாலை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் செபமாலை சொல்லவும், அமைதிக்காக இறைவேண்டல் செய்யவும் தாயாரான வேளை, பெண்களின் பங்களிப்பு முதல் சிறார்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பு வரையிலான தலைப்புகளை முன்னிலைப்படுத்தி கலந்துரையாடப்பட்ட கருத்துக்களை எடுத்துரைத்தனர் உரையாளர்கள்.

திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து எடுத்துரைத்தார் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறைத் தலைவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தகவல் ஆணையத்தின் தலைவருமான Paolo Ruffini.

அக்டோபர் 20, வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடந்த பதினைந்தாவது பொதுச் சபையானது மத்திய கிழக்கு, உக்ரைன், அமேசான் மற்றும் அதற்கு அப்பால் போர் அல்லது துன்பம் நிறைந்த இடங்களிலிருந்து மிகவும் வலுவான, உணர்வுபூர்வமான மற்றும் ஆழமான சாட்சியங்களால் வகைப்படுத்தப்பட்டது என்றும் முழுப் பேரவையும் கரங்களைத் தட்டி இச்சாட்சியங்களைப் பாராட்டி வரவேற்றது என்றும் கூறினார் Ruffini.

இந்த உரைகளில் குறிப்பிடப்பட்ட மற்றொரு முக்கியமான காரியம் திருத்தந்தையுடன் காட்டவேண்டிய முழு ஒன்றிப்பு என்றும், பேதுருவுடன் அடிப்படை உறவில் இல்லாதவர்கள், கிறிஸ்துவின் மறையுடலாகக் கருதப்படும் திருஅவையைக் காயப்படுத்தியவர்களுக்குச் சமம் என்றும்,  இனவெறி மற்றும் போரால் குறிக்கப்பட்ட இவ்வுலகினை உடைந்த இயேசுவின் மறையுடல் எடுத்துக்காட்டுகிறது என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறினார் Ruffini.

பாலியல் முறைகேடுகளுக்கான சிக்கலைத் தீர்க்கவும், அதற்கான பரிந்துரைகளின் தளமாகவும் இம்மாமன்றம் அமைந்துள்ளது என்று விளக்கிய மாமன்ற தகவல் ஆணையத்தின் செயலர் திருமதி Sheila Pires அவர்கள், கலந்துரையாடலின்போது பாலியல் முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பொருத்தமான கட்டமைப்புகளின் தேவை வலியுறுத்தப்பட்டது என்றும், பாலியல் முறைகேடுகளால் ஏற்படும் துயரத்தை நிவர்த்தி செய்ய புதிய கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தியதற்காகத் திருத்தந்தைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது என்றும் எடுத்துரைத்தார்.

இரண்டு ஆண்டுகளில், முதலில் திருஅவையிலும், பின்னர் மறைமாவட்டங்களிலும், தேசிய மற்றும் கண்டங்கள் அளவிலும் இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் முன்தயாரிப்பின்போது தங்களுக்குப் பெரிதும் துணை நின்றது தூய ஆவியானவர்தான் என்றும், அவர் கூறியதையே தாங்கள் செய்ததாகவும் தெரிவித்தார்  பெருவியன் நாட்டு இயேசு சபைக் கர்தினால்  Pedro Ricardo Barreto Jimeno.

மேலும் ஆயர்களாகிய நாங்கள், ஒரு எல்லைக்குட்பட்ட மறைமாவட்டத்திற்குப் பொறுப்பானவர்களாகவும், அதேவேளையில், உலகளாவிய திருஅவைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன்  இணைப்பொறுப்பாளராகவும் உள்ளோம் என்றும், பெரும்பான்மையான ஆயர்களின் சார்பாகவே நாங்கள் இவ்வாயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கிறோம் என்றும், உண்மையில் நாங்கள் இம்மாமன்றக் கூட்டத்தின் சிறப்பை அனுபவித்து வருகின்றோம் என்றும், அதேவேளையில் இருபால் துறவியர், பொதுநிலையினர் அருள்பணியாளர்கள் ஆகியோரும் இங்கே எங்களுடன் இருப்பது எங்களுக்கு மகிழ்வைத் தருகின்றது என்றும் உரைத்தார் கர்தினால் Barreto.

மேலும் இம்மாமன்றத்தில், உலகளாவிய திருஅவையின் வாழ்க்கை அனுபவங்களைப் பெறுவதற்கும், சிறிய அளவிலான வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் கிடைத்த வாய்ப்பைப் பாராட்டிய கர்தினால் Barreto அவர்கள்,  இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகளின் பன்முகத்தன்மை ஆகியவை ஒரே தூய ஆவியாரில் ஒன்றுபட்டிருப்பதையும், இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வைத் தருகின்றது என்றும் கூறினார்.

இந்த உலக ஆயர்கள் மாமன்றம் மனமாற்றத்திற்கான புதியதொரு வழியைத் திறந்துள்ளதாகவும், பலவற்றைக் குறித்துப் புதிதாகக் கற்றுக்கொள்ளும் பாதையாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார் ஜெர்மனி ஆயர் Franz-Josef Overbeck

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2023, 16:51