உலக ஆயர்கள் மாமன்றம் என்பது தூய ஆவியில் ஓர் உரையாடல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலக ஆயர் மாமன்றம் என்பது ஒரு வட்ட மேசை மாநாடு மட்டுமல்ல, நிச்சயமாக அது ஒரு பேச்சு நிகழ்ச்சியும் அல்ல, மாறாக, அது தூய ஆவியில் ஓர் உரையாடல் என்று கூறினார் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறைத் தலைவர் Paolo Ruffini
எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய கிழக்கில் அமைதிக்காக உண்ணா நோன்பும் இறைவேண்டலும் நிகழ்ந்த வேளையில் அக்டோபர் 17, செவ்வாயான்று நிகழ்ந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களின் பங்கு, ஆயர்களின் பணிகள், பொதுநிலையினரின் பங்களிப்பு மற்றும் திருஅவைச் சட்டத்தில் சாத்தியமான சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் தொடர்ந்ததாகவும் தெரிவித்தார் Ruffini.
கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலையினரின் பணிகள் குறித்து, திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் நடைபெற்று வரும் உலக ஆயர்கள் மாமன்ற கூட்டத்தில் அன்று நிகழ்ந்த கலந்துரையாடல்களின் முடிவுகளை சமர்ப்பித்தார் Ruffini.
இம்மாமன்றத்தின் தொடக்கத்தில், பொதுச் சபையில் பங்கேற்பாளர்களின் பயணம் குறித்து Ruffini பேசியதைக் தொடர்ந்து, திருஅவையின் சட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய ஆயரும் திருஅவைச் சட்ட வழக்கறிஞருமான Randazzo அவர்கள், மாற்றம் என்பது ஒரு புரட்சி அல்ல, ஆனால் அதுவொரு பரிணாம வளர்ச்சி என்றும் திருஅவையின் தேவைகள் மாற்றத்திற்குத் தயாராக இருக்கும்போது சட்டமே மாறலாம் என்றும் கூறினார்.
பெண்களின் திருப்பணி மற்றும் பங்கு குறித்து தொடர்ந்து பேசிய Ruffini அவர்கள், மேய்ப்புப்பணி ஆலோசனைக் கூட்டங்களில் பெண்கள் இருக்கும்போது, முடிவுகள் மிகவும் நடைமுறைக்குரியதாகவும், குழுமங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் என்று எடுத்துக்காட்டியதுடன் எந்தயொரு காரியத்தையும் செய்யவேண்டுமெனில் அதில் பெண்களின் பங்கேற்பு என்பது மிகவும் அவசியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஆயர் பணிகள் குறித்து குறிப்பிட்டபோது, ஒரு ஆயர் என்பவர் சமய மற்றும் சமய உரையாடலை ஊக்குவிக்க வேண்டும், அவர் நிதி, பொருளாதார மற்றும் சட்ட அம்சங்களை நிர்வகிக்க வேண்டும் என்றும் இதுபோன்ற பிரச்சனைகளை சுமையாகக் கருதக் கூடாது என்றும் கூறிய திருமதி Pires அவர்கள், அவர் ஒத்துழைப்பாளர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து உதவி பெறவேண்டுமெனவும் தனது கருத்தை முன்மொழிந்தார்.
அவர் மட்டும் மறைமாவட்டம் அல்ல என்பதையும், அவரால் மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது என்பதையும் ஓர் ஆயர் என்பவர் நன்றாகப் புரிந்து செயல்பட வேண்டும் என்று மேலும் எடுத்துக்காட்டினார் திருமதி Pires.
திருஅவையின் வாழ்க்கைக்கான மிகவும் உற்சாகமான தருணத்தைப் பற்றி பேசிய பேராசிரியர் கோஹ்லர்-ரியான் அவர்கள், இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஓர் உலகளாவிய திருஅவையாக, பல்வேறுபட்ட குரல்களைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்றும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, உலக ஆயர்கள் மாமன்றம் என்பது, ஒரு பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை, ஆனால் இது ஒரு செயல்முறையிலிருந்து உருவாகும் திருஅவையின் பகுத்தறிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று ஒரு நிருபரின் கேள்விக்கு பதிலளித்த ருஃபினி அவர்கள், அதாவது, இது திருஅவை உலகில் எவ்வாறு நடக்க முடியும்" என்பதைப் பற்றிய பகுத்தறிவைப் பற்றியது என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்