ஆயர் மாமன்றத்தில் முதுபெரும்தந்தையின் அமைதிக்கான செபம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அக்டோபர் 12 வியாழன் காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தின் துவக்கத்தில் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ மற்றும் ஃபோக்கோலார் இயக்கத்தின் தலைவர் Margaret Karram, ஆகியோர் தலைமையில் அமைதிக்கான செபம் வழிநடத்தப்பட்டது.
போர் மற்றும் மோதலினால் துன்புறும் புனித பூமி, உக்ரைன் ஆகியவற்றிற்காக செபிக்க வேண்டும் என்றும், லெபனானில் நிலவும் கரிய வன்முறையினால் மக்கள், அச்சம் மற்றும் கவலைகளோடு வாழ்கின்றனர் என்றும் தன் செபத்தில் எடுத்துரைத்தார் முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ.
மாண்பு மற்றும் உடன்பிறந்த உணர்வோடு வாழ, மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் என்றும், ஒற்றுமை என்றால் அச்சம் மற்றும் துன்பத்தில் வாழும் அனைத்து நிலையிலுள்ள மக்களோடும் ஒன்றிணைந்து வாழ்வது என்றும் கூறினார் முதுபெரும்தந்தை கர்தினால் சாக்கோ.
ஃபோக்கொலார் இயக்கத்தின் தலைவர் Margaret Karram தனது செபத்தின்போது, வரலாறு காணாத வன்முறையின் பிடியில் இருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள், வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக குழந்தைகள், காயமடைந்தவர்கள், பணயக் கைதிகள், காணாமல் போனோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக செபித்தார்.
உலகெங்கிலும் அமைதிக்காக மன்றாடுபவர்களின் குரலோடு நமது குரலையும் இணைத்து செபிப்போம் என்று கூறிய Margaret Karram அவர்கள், மத்திய கிழக்கின் பிற நாடுகள், வன்முறை, போர் மற்றும் மோதல்களினால் பாதிக்கப்படும் அனைத்து நாடுகளையும் நினைவு கூர்ந்து செபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மனித உடன்பிறந்த உணர்வுடன் கூடிய உலகத்தை கட்டியெழுப்ப, இறைவன் நமக்கு உதவ அருள்வேண்டுவோம் என்றும், இதன் வழியாக போர் மற்றும் மோதல்களினால் உறுதியற்ற தன்மையில் இருப்பவர்கள், நீதி, உரையாடல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை இன்றியமையாத கருவிகளாக இருக்கும் மனித உரிமைகளுக்கான மரியாதையின் பாதையைக் கண்டறியவும், அமைதியை கட்டமைக்கவும் அருள்வேண்டி செபித்தார்.
முதுபெரும்தந்தை கர்தினால் சாகோவின் இறுதி செபம்.
எல்லாரையும் பாதுகாத்துக் கவனித்துக் கொள்ளும் இறைவா! உம்மைப் போல சாயல் கொண்ட ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒரே குடும்பமாக வாழவும், வன்முறை, போர் இன்றி, சகோதர மனப்பான்மையுடன், ஒற்றுமையாக வாழவும் அருள்தாரும் என்று வேண்டி தன் ஆசீரை அளித்தார் முதுபெரும்தந்தை கர்தினால் சாக்கோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்