தேடுதல்

ஆயர் மாமன்ற கூட்டம் ஆயர் மாமன்ற கூட்டம்  (ANSA)

14-20% மக்கள் மதநம்பிக்கையற்று, நற்செய்திக்காக காத்திருப்பு

ஆசியாவில் திருஅவை அக்கண்டத்தின் கலாச்சாரத்தோடும், மதங்களோடும், ஏழைகளோடும், இயற்கையோடும் ஒருங்கிணைந்து நடைபோட்டு வருகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அக்டோபர் 4ஆம் தேதி அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் திருவிழாவன்று வத்திக்கானில் துவங்கிய ஆயர் மாமன்றம், தன் முதல் வாரத்தில் சிறு குழுக்களாகப் பிரிந்து தங்கள் ஒருங்கிணைந்த பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இவ்வாரம் திங்களன்று பொதுமாமன்றக் கூட்டத்தில் பங்கேற்போரின் கருத்துக்கள் பகிரத் துவக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த பயணத் திருஅவையின் நம்பிக்கைகள் மற்றும் ஏக்கங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டுவரும் இந்த ஆயர் மாமன்றக் கூட்டத்தில் அக்டோபர் 9 திங்களன்று முன்னுரை வழங்கிய கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், தலத்திருஅவைகளில் இறைமக்களுடன் நடத்திய ஆலோசனைகளின்போது எழுந்த மூன்று கேள்விகள் குறித்து வரும் நாட்களில் இந்த ஆயர் மாமன்றம் விவாதிக்கும் என எடுத்துரைத்தார்.

திங்களன்றின் பொதுஅவையில், கிணற்றடியில் சமாரியப்பெண் என்ற தலைப்பில் தொமினிக்கன் சபை அருள்பணி Timothy Radcliffe அவர்களும், இறைவனின் செம்மறியாம் இயேசுவுக்கும் திருஅவைக்கும் இடையேயான திருமண விருந்து என்ற தலைப்பில் ஒன்றிப்பு குறித்து இங்கிலாந்தின் பேராசிரியை Anna Rowlands அவர்களும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் சார்பில் பேராயர் Pisidia Job அவர்களும் உரை வழங்க, ஆசியாவிலிருந்து, மலேசியாவின் அருள்பணி Clarence Devadassan, ஹாங்காங்கிலிருந்து Siu Wai Vanessa CHENG ஆகியோரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இறைவனுடன் ஆன ஒன்றிப்பு மற்றும் அனைத்து மனித குலத்துடன் ஆன ஒன்றிப்பின் கருவியாகவும் அடையாளமாகவும் நாம் எப்படி மேலும் முழுமையாக செயல்படமுடியும் என்பது குறித்து இப்பொதுஅவையில் உரையாற்றிய மலேசிய அருள்பணி கிளாரன்ஸ் தேவதாஸ் அவர்கள்,  பல்வேறு கலாச்சாரங்களின், மதங்களின், மொழிகளின், இனங்களின் இருப்பிடமாக இருக்கும் ஆசியா, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், புத்தம், ஜைனம், சீக்கியம், தாவோயிசம், கன்பூசியனிசம், சிந்தோயிசம் என பல மதங்களின் பிறப்பிடமாகவும் தொட்டிலாகவும் இருந்துவருகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

400 கோடி மக்களைக் கொண்ட ஆசியாவில் பிலிப்பீன்ஸ் மற்றும் கிழக்கு திமோர் தவிர அனைத்து நாடுகளிலும் கத்தோலிக்கர் வெகு சிறுபான்மையினராக, அதாவது 3.31 விழுக்காடாக இருந்துவருகின்றபோதிலும், பொது நலனுக்காக, சமூக வளர்ச்சிக்காக, குறிப்பாக, கல்வி, நல ஆதரவு, ஏழைகளுக்கான சேவை என பல துறைகளில் தொடர்ந்து ஆற்றிவரும் பணிகளை முன்வைத்தார் அருள்பணி தேவதாசன்.

இதே பொதுஅவையில், ஒருங்கிணைந்து நடைபோடுதலும் ஆசிய கலாச்சாரங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய ஹாங்காங்கின் Siu Wai Vanessa Cheng என்பவர், ஆசியக்கண்டத்தில் 2,300க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகவும், ஆசியாவின் மொத்த மக்கள் தொகையில் 6.53 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, 14 முதல் 20 விழுக்காட்டினர் மதநம்பிக்கையற்றவர்களாக, நற்செய்திக்காக காத்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆசியாவில் திருஅவை அக்கண்டத்தின் கலாச்சாரத்தோடும், மதங்களோடும், ஏழைகளோடும், இயற்கையோடும் ஒருங்கிணைந்து நடைபோட்டு வந்துள்ளது, வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார் ஹாங்காங்கின் Vanessa CHENG.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2023, 15:34