அருளாளராக உயர்த்தப்பட்ட கர்தினால் EDUARDO FRANCISCO PIRONIO
மெரினா ராஜ் – வத்திக்கான்
அனைவருக்கும் சகோதரனாகவும், தந்தையாகவும், ஆசிரியராகவும் இருந்த ஒருவரை அருளாளராக, பரிசாக நமக்களித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி என்றும், அருளாளர் Eduardo Francisco Pironio அவர்களின் முன்மாதிரிகையான வாழ்க்கையும் வார்த்தையும் எப்போதும் நம் இதயங்களில் உள்ளது என்றும் கூறினார் கர்தினால் FERNANDO VÉRGEZ ALZAGA.
டிசம்பர் 16 சனிக்கிழமை அர்ஜெண்டினாவின் தூய லூஜான் அன்னை மரியா திருத்தலத்தில் கர்தினால் Eduardo Francisco Pironio அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலியின் போது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார் வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவர், கர்தினால் Fernando Vérgez Alzaga.
தாழ்ச்சியான பணியாளர், நற்செய்தியில் ஆழமான நம்பிக்கை கொண்டவர், பொறுமையின் சாட்சி, தனது ஏழை சகோதரர்களின் துணிச்சலான பாதுகாவலர்" என்றும், அர்ஜெந்தினாவின் லூஜான் அன்னை மரியாவிற்கு அருளாளர் எதுவார்தோவிற்கும் இடையில் பிரிக்க முடியாத ஒரு இணைப்பு உள்ளது என்றும் கூறினார் கர்தினால் FERNANDO VÉRGEZ ALZAGA
கர்தினால் Eduardo Francisco Pironio இறந்த பிறகும் அர்ஜென்டினா முழுவதிலுமிருந்து நம்பிக்கையாக நிலைத்திருக்கும் ஒரு பிணைப்பு, விண்ணகத்தில் அவர் அனுபவிக்கும் கன்னி மரியாவின் மீதான அவரது அன்பை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் கர்தினால் ALZAGA.
விண்ணக மகிழ்ச்சி
ஒரு ஆணோ பெண்ணோ திருஅவையால் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டால் அவர்கள் விண்ணக மகிமையில் கடவுளைப் பற்றிய சிந்தனையில் மகிழ்ச்சியின் முழுமையை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம் என்று எடுத்துரைத்த கர்தினால் ALZAGA அவர்கள், விண்ணகம் என்பது கடவுளின் மகிழ்ச்சியில் நுழைவது என்றும் அருளாளராக உயர்த்தப்பட்ட அந்த நபர் கடவுளுடன் நெருங்கிய உறவில் இருக்கின்றார் என்பது திருஅவை இதன்வழியாக உறுதிப்படுத்துகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
புனிதத்தன்மை, அவரது வீர நற்பண்புகள், முன்மாதிரியான வாழ்க்கை, எழுத்துக்கள் அவரால் நிகழ்ந்த அற்புதங்கள் மற்றும் புதுமைகள் அனைத்தும் தீவிரமான ஆராய்ச்சியுடன், நிபுணர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது என்று எடுத்துரைத்த கர்தினால் அல்சாகா அவர்கள், ஆண்டவராகிய தந்தைக் கடவுள் என்னை மிகவும் அன்பு செய்கின்றார், அன்னை மரியா என்னுடன் இருக்கின்றார், விதையாக மடிய சிலுவையின் பலனை வாழ்வது அவசியம் என்னும் மூன்று கருத்துக்களை எப்போதும் தனது வாழ்வில் கடைபிடித்தவர் அருளாளர் Eduardo என்றும் கூறினார்.
அருளாளர் Eduardo Francisco Pironio வாழ்க்கை வரலாறு
தந்தை ஜோசப் தாய் எரிக்கா என்னும் பெற்றோருக்கு 22 ஆவது மகனாகப் பிறந்தவர் EDUARDO FRANCISCO PIRONIO. அர்ஜெந்தினாவின் ஜூலியோ எனும் சிறு கிராமத்தில் 1920ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் பிறந்தார். 1943 இல் அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டு, 1964 ஆம் ஆண்டில் செசிரி மறைமாவட்ட ஆயராகவும், லா பிளாட்டாவின் துணை ஆயராகவும், 1972 இல் மார் டெல் பிளாட்டாவின் ஆயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968 முதல் 1975 வரை அவர் முதல் பொதுச் செயலாளராகவும் பின்னர் இலத்தீன் அமெரிக்க ஆயர் கவுன்சில் தலைவராகவும் இருந்தார்.
1974 ஆம் ஆண்டில், ரோமன் கியூரியாவில் ஆன்மீகப் பயிற்சிகளை எடுத்துரைக்க திருத்தந்தை ஆறாம் பவிவுல் அவர்களால் அழைக்கப்பட்டார். துறவியர் பேராயத்தின் தலைவராக திருத்தந்தை துய ஆறாம் பவுல் அவர்களால் நியமிக்கப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் கர்தினாலாக நியமிக்கப்பட்டார்.
1984 ஆம் ஆண்டில் திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்களால் பொது நிலையினருக்கான திருப்பீடத்துறை தலைவராக நியமிக்கப்பட்டு உலக இளையோர் தினங்களை உருவாக்குவதில் அவருடன் இணைந்து ஒத்துழைத்தார்.
சில காலமாக எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் 1998 பிப்ரவரி 5 அன்று தனது 77வது வயதில் வத்திக்கானில் காலமானார். அர்ஜென்டினாவின் லுஜான் அன்னை திருத்தலத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2006 ஜூன் 23, அன்று, புனிதர் பட்டத்திற்கான மறைமாவட்ட அளவிலான செயல்பாடுகள் உரோம் மறைமாவட்டத்திற்கான திருத்தந்தையின் பிரதிநிதியான கர்தினால் கமிலோ ருயினி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
2022 பிப்ரவரி 18, அன்று, திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் பிரோனியோவின் வீரத்துவ நற்பண்புகளை அங்கீகரித்து, அவரை இறை ஊழியராக அறிவித்தார். 2023 நவம்பர் 8, அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் எட்துவார்தோ அவர்களின் பரிந்துரையால் நடந்த ஓர் அற்புதத்தை அங்கீகரித்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் அருளாளராக அவர் உயர்த்தப்பட வழிவகுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்