தேடுதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இடம்பெறும் COP28 கூட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இடம்பெறும் COP28 கூட்டம் 

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் குறித்த கல்வியின் முக்கியத்துவம்

காலநிலை மாற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு தெளிவான, காலவரையறைகளை உள்ளடக்கிய ஒரு திட்டம் அரசியல் தலைவர்களால் எடுக்கப்பட வேண்டியதன் அவசரம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பிரிவினைவாத, குறுகிய கண்ணோட்டமுடைய மற்றும் தன்னலமான செயல்பாடுகளினால் இவ்வுலகம் அச்சுறுத்தப்படக் கூடாது என்ற நல்நோக்கத்துடன் நம் பொது இல்லமாகிய இவ்வுலகின் மீது அக்கறைக் கொண்டு திருத்தந்தை செயல்பட்டு வருவதாக அறிவித்தார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

நுரையீரல் பாதிப்பு காரணமாக ஓய்வில் இருந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இடம்பெறும் COP28 கூட்டத்தில் பங்குபெறமுடியாதிருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக அங்கு சென்றுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், வத்திக்கான் செய்திகளின் Massimiliano Menichetti அவர்களுக்கு வழங்கிய நேர்முகத்தின்போது இவ்வாறு கூறினார்.

காலநிலை மாற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு தெளிவான, காலவரையறைகளை உள்ளடக்கிய ஒரு திட்டம் அரசியல் தலைவர்களால் எடுக்கப்பட வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், அண்மையில் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் Laudate Deum சுற்றுமடலில் இவ்வுலகம் குறித்த அக்கறையும் ஆழ்ந்த கவலையும் வெளியிடப்பட்டுள்ளதைத் தெரிவித்தார்.

1992ஆம் ஆண்டு முதல் எடுத்துவரும் அனைத்து நல்நடவடிக்கைகளுக்கும் இந்த COP28 கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு செயல்முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்த திருப்பீடச் செயலர், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் குறித்த கல்வியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அக்கறை, உடன்பிறந்த உறவு நிலை, மனிதகுலத்திற்கிடையேயான ஒத்துழைப்பு, மனித குலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான இணக்கம் ஆகியவைகளில் ஒன்றிணைந்த மனிதகுல முன்னேற்றமும் அதன் தாங்குதிறனும் தன் அடிப்படையைக் கொண்டுள்ளன என்பதை வலியுறுத்திய கர்தினால், காலநிலை மாற்ற நெருக்கடி என்பது, மனித மாண்புடன் தொடர்புடைய ஓர் உலகளாவிய சமூகப்பிரச்சனை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உக்ரைனிலும் இஸ்ராயேல்-பாலஸ்தீனிய பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்களால், உலகின் கவனம் அங்கு திருப்பப்பட்டு, சுற்றுச்சூழல் நெருக்கடியின் முக்கியத்துவம் குறைந்துவருவதையும் சுட்டிக்காட்டினார் திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2023, 15:02