இறைவிருப்பதிற்கு, இறைத்திட்டத்திற்கு இயைந்ததான ஆசீர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஒரே பாலினத் தம்பதியருக்கு ஆசீர் வழங்குவது இயலக்கூடிய ஒன்றே எனவும், ஆனால் அவ்வாறு ஆசீர் வழங்குவது எவ்வித திருவழிபாட்டுச் சடங்கு முறைகளும் அற்றதாக, திருமணம் என்ற எண்ணப்போக்கைத் தராததாக இருக்க வேண்டும் என விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
திருத்தந்தையின் அங்கீகாரத்துடன் Fiducia supplicans என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த திருஅவைக் கோட்பாட்டு அறிக்கை, இதன் வழியாக திருமணம் குறித்த திருஅவைக் கோட்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், ஒரே பாலினத் தம்பதியருக்கு ஆசீர் வழங்குவது என்பது, அவர்களின் ஒன்றிப்பு வாழ்வை அங்கீகரிப்பதன் அர்த்தமாகாது எனவும் கூறுகிறது.
ஒழுங்குமுறைகளை மீறி வாழும் தம்பதியர் ஆசீரைக் கேட்கும்போது, அதை அருள்பணியாளர்கள் வழங்குவதில் தடையில்லை எனவும், மேய்ப்புப்பணியின் நெருக்கத்தைக் காட்டும் இத்தகைய நடவடிக்கை, எச்சூழலிலும் திருமணத்திற்குரிய சடங்குமுறைகளை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது எனவும் கூறுகிறது.
கிறிஸ்தவ ஒழுக்கமுறைக் கோட்பாடுகளுக்கு இயைந்தமுறையில் வாழாமல், அதேவேளை திருஅவையின் ஆசீரை தாழ்மையுடன் இறைஞ்சும் தம்பதியரை வரவேற்று இறையாசீரை வழங்குவது இயலக்கூடியதே என உரைக்கிறது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.
திருமணத்தை நிறுவுபவை எவை என்பதற்கும் திருமணத்திற்கு எதிரானவை எவை என்பவைகளுக்கும் இடையே குழப்பங்களைத் தருபவைகளாக ஒரே பாலினத் தம்பதியருக்கு வழங்கும் ஆசீரோடு தொடர்புடைய சடங்குமுறைகள இருக்கக்கூடாது எனவும் தெளிவாகத் தெரிவிக்கிறது திருஅவையின் இவ்வறிக்கை.
கத்தோலிக்க திருஅவைக் கோட்பாடுகளின்படி, திருமணத்திற்குப்பின் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இடம்பெறும் உடலுறவே சட்டபூர்வமானது என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது Fiducia supplicans என்ற அறிக்கை.
இறைமக்களால் பெறப்படும் பல்வேறு வகையான ஆசீர்களின் அர்த்தங்கள் குறித்தும் இவ்வறிக்கையின் இரண்டாம் பகுதி மிக விரிவாக விளக்குகின்றது.
இறைவிருப்பதிற்கு மற்றும் இறைத்திட்டத்திற்கு இயைந்ததாக எந்த ஓர் ஆசீரும் வழங்கப்படவேண்டும் எனவும் கூறும் இவ்வறிக்கை, இதன் காரணமாக, ஒரே பாலின தம்பதியருக்கும், ஒழுங்குமுறைகளை பின்பற்றாமல் இணைந்து வாழும் தம்பதியருக்கும் திருவழிபாட்டுச் சடங்குகளுடன் ஆசீரை வழங்குவதற்கு திருஅவைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கிறது.
ஓர் ஆசீரைப் பெறுவது என்பது ஓர் அருளடையாளத்தைப் பெறுவதற்கு சமமானதாக கருதப்படக்கூடாது எனவும் தெரிவிக்கிறது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் அறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்