மீட்பளிக்கும் வல்லமையுடைய அருளடையாளங்களை மறுப்பது தவறு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருமணமின்றி குழந்தைப் பெற்று வாழும் தாய்மார்களுக்கு அருளடையாளங்களை வழங்க மறுப்பது தவறாகும் எனவும், ஏற்கனவே பல இடற்பாடுகளை வாழ்வில் சந்தித்துவரும் இப்பெண்கள் அருளடையாளங்களின் மீட்பளிக்கும் வல்லமையைப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருமணத்திற்கு வெளியே குழந்தைப் பெற்று வாழும் ஒற்றை தாய்களுக்கு அருளடையாளங்களை வழங்குவதில் சில திருஅவை அதிகாரிகள் கடுமைக் காட்டிவருவது குறித்து தொமினிக்கன் குடியரசின் ஆயர் Ramón Alfredo de la Cruz Baldera அவர்கள் விசுவாசக்கோட்பாட்டு திருப்பீடத்துறைக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டிருந்ததற்கு பதில்மொழியாக இதனை வெளியிட்டுள்ளது அத்திருப்பீடத்துறை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அங்கீகாரத்தோடு இச்செய்தியை வெளியிடுவதாகக் கூறும் விசுவாசக்கோட்பாட்டு திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Victor Fernandez அவர்கள், திருமணத்திற்கு வெளியே குழந்தைப் பெற்று தனியாக வாழும் தாய்மார்கள் அருளடையாளங்களைப் பெறுவதிலிருந்தும், தங்கள் குழந்தைகளுக்கு திருமுழுக்கு அளிப்பதிலிருந்தும் தடுக்கப்படுவது பல இடங்களில் இடம்பெற்றுவருவது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளார்.
நம் இதயத்தின் ஆழமான பசியின் பதிலுரையாக இருக்கும் திருநற்கருணையில், இயேசு நம்மிடையே குடிகொண்டு நம் பயணத்தில் நமக்கு ஆறுதலையும் ஊட்டத்தையும் வழங்குகிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, அந்த மீட்பளிக்கும், மற்றும் ஆறுதல் தரும் அருளடையாளத்தை அத்தாய்மார்கள் பெற ஊக்கமளிக்கப்பட வேண்டும் எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் Victor Fernandez.
திருமணம் புரியாமலேயே கர்ப்பம் தரித்த பெண்கள் தங்கள் கருவைக் கலைக்காமல் சமூகத்தின் இழிச்சொற்களையும் தாண்டி குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கு மனதைரியம் வேண்டும் எனக்கூறும் கர்தினால், இவர்களுக்கு இறைவனின் மீட்பளிக்கும் வல்லமையுடைய அருளடையாளங்களை மறுப்பது தவறாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருமணமின்றி ஒற்றைத் தாயாய் ஒரு பெண் இருப்பது, எவ்வகையிலும் திருநற்கருணை பெறுவதிலிருந்து தடைசெய்யவில்லை எனக்கூறும் கர்தினால் Victor Fernandez அவர்கள், இத்தாய்மார்கள் கருணையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்