யூபிலி ஆண்டுக்கான புனித பேதுரு பெருங்கோவிலின் பிறரன்புப் பணிகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2025-ஆம் ஆண்டு யூபிலி விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும் வேளை, புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறைக்கைதிகளுக்கு உதவும் நோக்கில் பிறரன்பு பணிக்கான இரண்டு புதிய திட்டங்களை புனித பேதுரு பெருங்கோவில் தொடங்கியுள்ளதாகக் கூறினார் பேராயர் கர்தினால் Mauro Gambetti.
டிசம்பர் 5, இச்செவ்வாயன்று, வத்திக்கானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வரவிருக்கும் யூபிலி விழாவிற்கும் புனித பேதுரு பெருங்கோவிலின் புதிய பிறரன்புப் பணி திட்டங்களுக்கும் இடையிலான உறவு குறித்தும் எடுத்துரைத்தபோது இவ்வாறு தெரிவித்தார் அதன் தலைமைக்குரு கர்தினால் Gambetti.
இந்தத் திட்டங்களில் முதன்மையானது Sea Rosaries அதாவது, கடல் செபமாலைகள் எனப்படும் திட்டம் என்றும், இது House of the Spirit மற்றும் the Arts Foundation-அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார் கர்தினால் Gambetti.
மேலும் புலம்பெயர்ந்தோர் பின்னணியைக் கொண்ட இரண்டு நபர்கள் புனித பேதுரு பெருங்கோவிலில், ஐரோப்பாவை அடைய புலம்பெயர்ந்தோர் பயன்படுத்திய படகுகளின் மரத்திலிருந்து ஜெபமாலைகளை உருவாக்க பணியாற்றி வருவதாக விளக்கிய கர்தினால் Gambetti அவர்கள், இந்த ஜெபமாலைகளை உருவாக்குக்குவதில் சில தொடக்கக் கட்ட வேலைகள் இத்தாலி முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள சிறைக்கைதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இரண்டாவது திட்டம், சிறைக் கைதிகள் மற்றும் முன்னாள் சிறைக் கைதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், இலாப நோக்கற்ற இரண்டாவது வாய்ப்பு சங்கத்துடன் (Second Chance Association) இணைந்து செயல்படுவதாகும் எனவும் செய்தியாளர்களிடம் விவரித்தார் கர்தினால் Gambetti.
மேலும் உரோமையின் Rebbibia சிறையிலுள்ள கைதி ஒருவர் பேதுரு பெரும்கோவிலில் மின் தொழிலாளராக முழுநேரப் பணியாளராக வேலை செய்து வருகிறார் என்றும், Viterbo-விலுள்ள Mammagialla சிறையில் உள்ள கைதிகள் பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால் Gambetti.
மோசே சட்டத்தின்படி, யூத மக்கள் எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியதை நினைவுகூரும் வகையில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலிகள் நடத்தப்பட வேண்டும் என்று எடுத்துக்காட்டிய கர்தினால் Gambetti அவர்கள், பண்டைய காலங்களில், யூபிலிகள் என்பது அடிமைகளை விடுதலை செய்வது, கடன்களை மன்னிப்பது மற்றும் நிலத்தை மீண்டும் உருவாக்க அனுமதிக்கும் வகையில் நிலத்தை விட்டுவிடுவது ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்