2025-ஆம் யூபிலி ஆண்டிற்கான தயாரிப்புக் கூட்டம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2025 யூபிலி ஆண்டிற்கு முன்னதாக நடைபெறவிருக்கும் முன்தயாரிப்பு கூட்டம் ஒன்றில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அர்ப்பண வாழ்வைத் தேர்ந்தோரின் பிரதிநிதிகள் உரோமையில் பிப்ரவரி 1 முதல் 4 வரை சந்திக்க உள்ளதாக வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் கர்தினால் Bras de Aviz.
இந்தச் சந்திப்பு ஐந்து கண்டங்களை ஒன்றிணைக்கும் தொடர் நிகழ்வுகளில் முதன்மையானது என்று தெரிவித்த அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தோர், மற்றும் திருத்தூதுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பினரை ஒருங்கிணைக்கும் திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Aviz அவர்கள், இவ்வாண்டு நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்ற கூட்டத்தின் முதல்நாளில் நிகழ்ந்தது போல் அனைவரும் ஒன்றிணைந்து அனுபவங்களைப் பகிர்ந்து இறைவார்த்தையின் ஒளியில் இந்த யூபிலி ஆண்டிற்கான திட்டங்களை ஒருங்கிணைப்போம் என்றும் தெரிவித்தார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தோர் பங்குபெறும் இந்தக் கூட்டம் உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டம்போல் புதிய பாணியில் நடைபெறும் என்றும், இது திருஅவையில் முக்கியமானதொரு தருணம் என்றும் விவரித்த கர்தினால் Aviz அவர்கள், இது கடவுளின் அனுபவத்திற்கு நம்மை நெருக்கமாகக் கொண்டு வருகிறது என்றும் ஒரு நல்ல தயாரிப்பை மேற்கொள்ள அவர்களுக்கு நல்லதொரு அழைப்பை வழங்குகிறது என்றும் கூறினார்.
இக்கூட்டத்தில் ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த ஒரு துறவற ஆண் மற்றும் பெண், ஒரு மதச்சார்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர் மற்றும் Ordo Virginum-வைச் சேர்ந்த அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட ஒரு பெண் ஆகியோர் பிரதிநிதிகளாகப் பங்கேற்பர் என்றும் தெரிவித்தார் கர்தினால் Aviz
தங்களது அர்ப்பண வாழ்க்கை மற்றும் பணியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் வழியாக, புனித யூபிலி ஆண்டை நோக்கியப் பயணத்தின் புதிய கட்டத்தை அவர்கள் ஒன்றிணைந்து திட்டமிடுவார்கள் என்றும், மக்களிடையே நல்லிணக்கத்தின் அடையாளமாகத் தொடர வேண்டும் என்ற தீர்மானமுடன் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவார்கள் என்றும் கூறினார் கர்தினால் Aviz .
நாம் சீர்திருத்தத்தை மேற்கொள்ளவேண்டிய ஒரு தருணத்தில் வாழ்கிறோம் என்றும், பல்வேறு பிரச்னைகளுக்கிடையே நமது அர்ப்பண வாழ்வைப் புதுப்பிக்கிறோம் என்றும் எடுத்துரைத்த கர்தினால் Aviz அவர்கள், நாம் திருஅவையின் ஒரு கொடையாக அதனுடன் இணைந்து சுவாசிக்கவும் வாழவும் வேண்டும் என்றும், இத்தகையதொரு சூழலில் நாம் இந்தச் சந்திப்பைக் நிகழ்த்தவிருக்கிறோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இவ்வேளையில், திருஅவை மேற்கொள்ளும் முழுப் பயணமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் பயணமும், திருஅவையாக இருப்பதற்கான ஒரே வழிதான் என்பதையும், நாம் ஒன்றாகப் பயணிப்பதற்கான ஒரு புதிய பாணியும் இதுதான் என்பதையும் உணர்ந்திடுவோம் என்றும் விவிரித்தார் கர்தினால் Aviz
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்