நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறையின் புதிய நூல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகலாவியத் திருஅவை 2025-ஆம் ஆண்டில் யூபிலி விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் வேளை, கிறிஸ்தவர்களுக்கான இறைவேண்டல் வழிகாட்டியாக, “எங்களுக்கு செபிக்க கற்றுக்கொடும்” என்ற நூல் ஒன்றை நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறை வெளியிட்டுள்ளதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
கடவுளுடனான தனிப்பட்ட உரையாடலாக செபத்தை தீவிரப்படுத்த விசுவாசிகளை அழைப்பதை நோக்கமாகக் கொண்டு, இன்றைய உலகில் விசுவாசிகளின் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பை சிந்திக்கும் நோக்கில், இந்நூலை நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறை வெளியிட்டுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புனித லூக்காவின் நற்செய்தியில் “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" (காண்க. லூக் 11:2) என்று கேட்ட இயேசுவின் சீடர்களின் கோரிக்கையிலிருந்து இந்நூலிற்கான தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது யூபிலிக்கான திருஅவையின் தயாரிப்புக்கான கட்டமைப்பை வழங்குகிறது என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி மூவேளை செபவுரையின்போது, யூபிலி ஆண்டிற்கான இறையருளை நிறைவாகப் பெறவும், கடவுளின் மீதான நம்பிக்கையின் வலிமையை அனுபவிக்கவும் உங்களைத் தயார்படுத்துவதற்கு உங்கள் இறைவேண்டலைத் தீவிரப்படுத்துங்கள் என்று விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தவேளை, யூபிலி ஆண்டிற்கு முன்னதாக, இறைவேண்டல் ஆண்டை அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும் அவ்வேளையில், இறைவேண்டல் ஆண்டின் நோக்கத்தை விளக்கிய திருத்தந்தை, தனிப்பட்ட வாழ்க்கையிலும், திருஅவையின் வாழ்க்கையிலும், உலகிலும் இறைவேண்டலுக்கான பெரும் மதிப்பையும் முழுமையான தேவையையும் மீண்டும் கண்டுபிடிப்பதற்கு இந்த ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
‘செபிக்க கற்றுக்கொடும்’ என்ற இந்நூலின் இத்தாலியப் பதிப்பு தற்போது நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறையின் இணையதளத்தில் இருந்து எந்த கட்டணமும் இல்லாமல் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. மேலும் ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரஞ்சு மற்றும் போலிஷ் பதிப்புகள் விரைவில் கிடைக்கும் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்