ஜெனீவாவில் கொண்டாடப்பட்ட உலக அமைதி தினம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்த ஆண்டு 57-வது உலக அமைதி தினக் கொண்டாட்டத்தில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமைதி நாளுக்கான செய்தியை எடுத்துக்காட்டியதுடன், தொழிநுட்ப முன்னேற்றம் ஒரு நெறிமுறை கட்டமைப்போடு இணைந்து அமைதி கலாச்சாரம் மற்றும் சிறந்த உலகத்தை கட்டியெழுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புகளுக்கான திருப்பீடத் தூதரகப் பணியகம், அனைத்துலகச் சமூகத்தின் உறுப்பினர்களையும் பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளையும் 'அமைதியின் விலைமதிப்பற்ற கொடை' என்ற மையக்கருத்தில் சிந்திக்க அழைத்த வேளை, இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் அயூசோ.
ஜெனிவாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், யூதர்கள், புத்த மதத்தினர், சூஃபி முஸ்லீம்கள் மற்றும் பெந்தக்கோஸ்து சபையினர் மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு மதச் சமூகங்களின் பிரதிநிதிகளும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு புனித 23-ஆம் யோவான் பங்குத்தளத்தில் நடைபெற்றது என்றும், இந்த இறைவேண்டல் நிகழ்வின் இடையிடையே அரேபியம், சீனம், பிரஞ்சு, ஆங்கிலம், இரஷியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் இறைவேண்டல்கள் எழுப்பப்பட்டன என்றும் கூறும் திருப்பீடத் தூதரகப் பணியகத்தின் செய்திக் குறிப்பு, அப்பங்குதளத்திலுள்ள பிலீபின்ஸ் மற்றும் ஆப்ரிக்கப் பாடகர் குழுவினரனின் இசையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று என்றும் தெரிவிக்கிறது.
மேலும் இந்நிகழ்வின்போது, பல்சமய விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆலிவ் கிளை பரிசாக வழங்கப்பட்டது என்றும், இது இந்நிகழ்வின் நினைவுச்சின்னமாகவும் அமைதிக்கான நமது பொதுவான முயற்சிகளின் அடையாளமாகவும் இருந்தது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்