தேடுதல்

ஐ.நா.வில் பேராயர் Gabriele Caccia ஐ.நா.வில் பேராயர் Gabriele Caccia  

ஏழ்மையை அகற்றல் பணிகளில் திருப்பீட அர்ப்பணம்

வறுமை நிலைக்குக் காரணமான மூலக் கூறுகளை ஆராய்ந்து அவைகளை அகற்றவேண்டிய கடமைகளை ஐ.நா.வில் வலியுறுத்தியது திருப்பீடம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகிலிருந்து ஏழ்மையை அகற்றல், சமூக வளர்ச்சியையும் சமூக நீதியையும் முன்னேற்றுதல், ஒவ்வொரு மனிதனின் ஒன்றிணைந்த மனித முன்னேற்றத்தைப் பெறுதல் ஆகியவைகளில் திருப்பீடம் எப்போதும் உறுதியான அர்ப்பணத்துடன் செயல்படுவதாக ஐ.நா. கூட்டத்தில் அறிவித்தார், ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் கபிரியேலே காச்சா.

ஏழ்மையை அகற்றுவது குறித்த 2030ஆம் ஆண்டிற்கான திட்டத்தின் விதிகளை எவ்விதம் செயல்படுத்துவது மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற சமூக வளர்ச்சி அவையின் 62வது கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் காச்சா அவர்கள், சமூக வளர்ச்சியையும், சமூக நீதியையும் குறித்தப் பணிகளில் யாவரும் ஏழைகள் மீதான சமூகத்தின் கடமையை முதலில் நினைவில் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.  

அடிப்படைத் தேவைகளை நிறைவுச் செய்வதற்கே இன்றைய உலகில் எண்ணற்ற மக்கள் பல கடுமையான துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில், இவர்களின் வறுமை நிலைக்குக் காரணமான மூலக் கூறுகளை ஆராய்ந்து அவைகளை அகற்றவேண்டிய அனைத்துலக சமுதாயத்தின் கடமைகளையும் வலியுறுத்தினார் பேராயர் காச்சா.

மனிதகுல முன்னேற்றத்திற்கு கல்வியின் முக்கியத்துவத்தையும் தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர், தொழிற்சாலை விதிகள் அனைத்தும் நீதியை ஊக்குவிப்பதாகவும், பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் மக்களைப் பயன்படுத்துவதாக இல்லாமல் மக்களுக்கு பயன்படுபவைகளாக இருக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

அனைத்து சமூக வளர்ச்சி விதிமுறைகள் குடும்பங்களை முன்னேற்றுவதை தஙகள் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுச் செயல்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் ஐ.நா.விற்கான திருப்பீட நிரந்தரப் பிரதிநிதி பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2024, 15:30