தேடுதல்

 1923-ஆம் ஆண்டில் குழந்தை இயேசு மருத்துவமனை 1923-ஆம் ஆண்டில் குழந்தை இயேசு மருத்துவமனை  

Bambino Gesù திருத்தந்தையின் மருத்துவமனைக்கு வயது 100!

'இதுவொரு மருத்துவமனை என்பதைவிட, ஒரு குடும்பம் என்றை நான் உணர்ந்தேன்' என்று 2017-ஆம் ஆண்டு, குழந்தை இயேசு மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் பணியாளர்களிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகளவில் குழந்தை மருத்துவ உதவிக்கான ஓர் அடையாளமாக விளங்கும் உரோமையிலுள்ள குழந்தை இயேசு மருத்துவமனை, 100 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 20-ஆம் தேதியன்று திருப்பீடத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்றும், அது தற்போது திருத்தந்தையின் மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது என்றும் அதன் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1869-ஆம் ஆண்டில், Duchess மற்றும் Duke Scipioni  ஆகியோர் குழந்தை இயேசு மருத்துவமனையை நிறுவினர் என்றும், உரோமையின் மையத்தில் உள்ள அவர்களது வீடு மற்றும் அதன் 12 படுக்கைகள் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நகரத்தின் முதல் மருத்துவமனையாக மாறியது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், 1924-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி, இந்த மருத்துவமனை திருப்பீடத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பின்னர், இது திருத்தந்தையின் மருத்துவமனையாக மாறியது என்றும், மேலும் உரோமை மற்றும் உலகெங்கிலும் உள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் பராமரிப்புக்கான ஓர் அடையாளமாக மாறியது என்றும் அவ்வரலாற்றுச் செய்திக் குறிப்புக் கூறுகிறது.  

அவ்வேளையில், இம்மருத்துவமனை Gianicolo மலையில் உள்ள புனித Onofrio-வின் பண்டைய துறவு இல்லத்திற்கு மாற்றப்பட்டது என்றும், 1887-ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்த இம்மருத்துவமனை இன்றுவரை அங்கேயே உள்ளது என்று கூறும் அச்செய்திக் குறிப்பு, இருப்பினும் 2030-ஆம் ஆண்டில் இது மீண்டும் Forlanini மருத்துவமனை இருந்த இடத்திற்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் உரைக்கின்றது.

இம்மருத்துவமனை திருப்பீடத்திற்கு  நன்கொடையாக அளிக்கப்படுவதற்கு முன்பு, 33,000 குழந்தைகள் ஏற்கனவே அதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். 1915 -ஆம் ஆண்டில் Avezzano நிலநடுக்கத்தின்போது  420 குழந்தைகள் இங்கே அனுமதிக்கப்பட்டனர். மேலும் 1918 -ஆம் ஆண்டு பெரும் போரின் போது ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300 குழந்தைகள் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1858-ஆம் ஆண்டு திருத்தந்தை 23-ஆம் யோவான் முதன் முதலில் இம்மருத்துவமனைக்கு வருகைதந்தார். அதனைத் தொடர்ந்து 1968-ஆம் ஆண்டில் திருத்தந்தை ஆறாம் பால், 1979-ஆம் ஆண்டில், திருத்தந்தை இரண்டாம் யோவான் பால், 2005-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மற்றும் 2017-ஆம் ஆண்டு  தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இம்மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2024, 14:00