தேடுதல்

உக்ரைன் போர் இரண்டாமாண்டு நினைவு உக்ரைன் போர் இரண்டாமாண்டு நினைவு   (ANSA)

நம்பிக்கையில் நிலைத்து உறுதியுடன் இருக்கும் மக்கள்

அளவுக்கதிகமான துன்பங்கள் மற்றும் வலிகளை ஏற்படுத்தியுள்ள போரினால் பலர் சொந்த நாடுகளை விட்டு புலம்பெயர்ந்தனர், சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்தனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உக்ரைனில் போர் தொடங்கி இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவடையும் நிலையில், வன்முறைகளுக்கு மத்தியிலும் வெறுப்பிலிருந்து தங்கள் இதயத்தை காத்து, நம்பிக்கையில் வலிமை பெற்று, உறுதியுடன் இருக்கும் பலரைத் தான் கண்டுணர்ந்ததாகக் காணொளிச்செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் மாசிமிலியானோ மெனிகெத்தி.

பிப்ரவரி 24 சனிக்கிழமை உக்ரைன் போரின் இரண்டாமாண்டு நினைவுகுறித்த தனது கருத்துக்களைக் காணொளிச் செய்தியாக வெளியிட்டபோது இவ்வாறு கூறியுள்ளார் வத்திக்கான் செய்தித்துறையின் ஆசிரியர் குழுமத்தில் ஒருவரான Massimiliano Menichetti.

அளவுக்கதிகமான துன்பங்கள் மற்றும் வலிகளை ஏற்படுத்தியுள்ள போரினால் பலர் சொந்த நாடுகளை விட்டு புலம்பெயர்ந்தனர், சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்தனர் என்று கூறிய மெனிகெத்தி அவர்கள், ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் பல செய்த அருள்பணியாளர் அலெக்சாண்டர், அருள்சகோதரிகள் ஆகியோரின் நம்பிக்கைக் கதைகள் வலிமை அளிக்கின்றன என்றும், இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் துணிவுடன் தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவிகள் பல செய்து, ஆறுதல் அளித்து நம்பிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அவர்களின் கண்கள், கைகள், முகங்கள் என அனைத்தும் நன்மையின் பணிக்காக உள்ளன என்று கூறியுள்ள மெனிகெத்தி அவர்கள், உடலளவிலும் மனதளவிலும் ஏராளமான மற்றும் ஆழமான காயங்களைக் கொண்டிருக்கும் மக்களையும் புன்னகை இல்லாத குழந்தைகளின் தோற்றத்தையும் உக்ரைன் போர் தந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

கண்ணீரால் நனைந்த கண்களைக் கொண்ட ஏராளமான மக்களின் கதைகளைத் தான் கேட்டதாக எடுத்துரைத்துள்ள மெனிகெத்தி அவர்கள், பொறுப்பில் இருக்கும் அனைவரிடமும், இந்த நிலை எப்போது மாறும்? போர் எப்போது நிறைவுறும்? என்று துன்புறும் அம்மக்களின் கண்ணீர் கேட்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருளான துன்ப நேரத்தில் உக்ரைன் தனியாக இல்லை, அது மனிதனின் இதயத்தை மாற்றக்கூடியதும், அமைதியை உருவாக்குகின்றதுமான செபத்தின் அரவணைப்பில் உள்ளது என்றும், இதனால் இருளான சூழ்நிலையிலிருந்து மீண்டு வெளிச்சத்துக்கு வந்து பிரகாசிக்கும் என்றும் கூறியுள்ளார் மெனிகெத்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2024, 14:54