தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்  (ANSA)

போரை நிறுத்த பேரம்பேச முன்வருவது, சரணடைதலைக் குறிப்பதல்ல

உக்ரைன் போரில் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவது, நீதியான நீண்டகால அமைதிக்கு வழிசெய்யும் அரசியல் தீர்வுக்கான சூழல்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதற்காகவே

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தையைப் பொறுத்தவரையில் போரை நிறுத்த பேரம்பேசுதல் என்பது சரணடைதலைக் குறிப்பதல்ல, மாறாக, நீதிக்கும் நீண்டகால அமைதிக்குமான முன்நிபந்தனை என உரைத்துள்ளார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

சுவிஸ் நாட்டு சமூகத்தொடர்பு நிறுவனத்திற்கு அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரைன் போர் குறித்து வழங்கிய நேர்முகத்தையொட்டி, இத்தாலியத் தினத்தாள் Corriere della Seraவுக்கு நேர்முகம் ஒன்றை வழங்கிய திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், அணுஆயுதப் போர் இடம்பெறுவதற்கான அச்சம் உள்ளது குறித்த ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.

இத்தாலிய தினத்தாளின் ஜியான் குய்தோ வெக்கி என்பவருக்கு திருப்பீடச் செயலரால் வழங்கப்பட்டுள்ள நேர்முகத்தில்,  திருத்தந்தை உக்ரைன் போரில் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவது, நீதியான நீண்டகால அமைதிக்கு வழிசெய்யும் அரசியல் தீர்வுக்கான சூழல்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதற்காகவே எனக் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரும் மனவுறுதியைக் கொண்டிருப்பது, சரணடைதலைக் குறிப்பிடாது என்ற கர்தினால், ஆக்ரமிப்பில் முதலில் ஈடுபட்டோர் இடைக்காலப் போர் நிறுத்தத்திற்கு முன்வந்து உரையாடலுக்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதையே திருத்தந்தை வலியுறுத்துகிறார் என மேலும் கூறினார்.

உக்ரைனிலும், புனித பூமியிலும், உலகின் பல பகுதிகளிலும் மோதல்களால் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மனதில் கொண்டு மனித வாழ்வுக்கான அக்கறையுடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என திருத்தந்தை எதிர்பார்க்கிறார் என்றார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2024, 13:30