தேடுதல்

வியட்நாம் வெளியுறவு அமைச்சருடன் பேராயர் கலகர் (09.04.24) வியட்நாம் வெளியுறவு அமைச்சருடன் பேராயர் கலகர் (09.04.24)  (AFP or licensors)

வியட்நாம் நாட்டில் பேராயர் கலகரின் 6 நாள் பயணம்

வத்திக்கானுக்கும் வியட்நாமுக்கும் இடையே அரசியல் உறவு 1975ஆம் ஆண்டு முறிவுபட்டபோதிலும், 1990ஆம் ஆண்டிலிருந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வியட்நாம் நாட்டின் பிரதமர், வெளியுறவு அமைச்சர், தலத்திருஅவை அங்கத்தினர்கள் ஆகியோரை நேரடியாக சந்திக்கும் நோக்கத்துடன் அந்நாட்டில் 6 நாள் பயணத்தைத் துவக்கியுள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு கலகர்.

நாடுகளுடன் ஆன உறவுகளுக்கான துறையின் செயலர் பேராயர் கலகர் அவர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஞாயிறு வரை வியட்நாம் நாட்டில் தன் அரசியல் மற்றும் திருஅவை தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருப்பார்.

வியட்நாம் பிரதமர் Pham Minh Chính, வெளியுறவு அமைச்சர் Bui Thanh Son ஆகியோரைச் சந்தித்து உரையாடுவதுடன் உள்துறை அமைச்சகத்தின் அரசியல் கூட்டத்திலும் கலந்துகொள்வார்.

Hanoi நகரின் புனித யோசேப்பு பேராலயத்தில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றுவதும் பேராயர் கலகரின் பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

Hue நகரிலுள்ள உயர் குருத்துவப் பயிற்சி இல்லத்திற்குச் சென்று மாணவர்களை சந்திக்கும் பேராயர், அங்குள்ள "Phu Cam" பேராலயத்தில் திருப்பலியும் நிறைவேற்றுவார்.

வியட்நாமின் கம்யூனிச பிரதிநிதிகள் குழு திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடியபின் ஜனவரி 18ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேராயர் கலகர் அவர்கள், வியட்நாம் நாட்டிற்கு அரசியல் உறவு சார்ந்த பயணம் மேற்கொள்ளவுள்ளது குறித்து எடுத்துரைத்திருந்தார்.

வத்திக்கானுக்கும் வியட்நாம் நாட்டிற்கும் இடையேயான அரசியல் உறவு 1975ஆம் ஆண்டு முறிவுபட்டபோதிலும், 1990ஆம் ஆண்டிலிருந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டு, 2011ஆம் ஆண்டில் வியட்நாமில் உறைவிடத்தைக் கொண்டிராத திருப்பீடத் தூதுவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக, 2023ஆம் ஆண்டு டிசம்பரில், வியட்நாமிலேயே திருப்பீடத் தூதுவர் தங்கி பணியாற்ற இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2024, 16:30