எத்தியோப்பியாவுடன் ஒன்றிப்பை வெளிப்படுத்தும் திருப்பீடம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எத்தியோப்பியாவின் மனிதாபிமான நெருக்கடிக்குப் பதிலிறுக்கும் வகையில், ஒன்றிப்பு மற்றும் அவசர நடவடிக்கையின் அவசியத்தை திருப்பீடம் வலியுறுத்துவதாகக் கூறினார் அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Ettore Balestrero
ஏப்ரல் 16, இச்செவ்வாயன்று, ஜெனிவாவில் நடைபெற்ற எத்தியோப்பியாவில் மனிதாபிமான சூழ்நிலைக்கான உயர்மட்ட உறுதிமொழி நிகழ்வில், திருப்பீடத்தின் சார்பாக இவ்வாறு கருத்துத் தெரிவித்த பேராயர் Balestrero அவர்கள், இந்நாடு அதிகமான மனிதாபிமான நெருக்கடியைத் தாங்கும் நாடாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
எத்தியோப்பியாவில் 44 இலடச்சத்திற்கும் அதிகமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மற்றும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் அவல நிலையையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார் பேராயர் Balestrero.
மேலும் எத்தியோப்பியாவில் மேற்கொள்ளப்படவேண்டிய பணியின் அவசரத்தையும் அளவையும் வலியுறுத்திய பேராயர் Balestrero அவர்கள், அந்நாட்டில் நிகழ்ந்து வரும் தற்போதைய சூழல், நமது ஒன்றிப்பையும் ஆதரவையும் வழங்கவும் செயல்படுத்தவும் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது என்றும் கூறினார்.
எத்தியோப்பியாவில் நிகழும் போர்கள், இயற்கைப் பேரழிவுகள், அதனால் ஏற்படும் நோய்கள் யாவும் ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதங்களை அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது என்றும், குறிப்பாக இது ஒரு இலட்சம் குழந்தைகள் மற்றும் ஏராளமான பெண்களைப் பாதித்துள்ளது என்றும் விளக்கினார் பேராயர் Balestrero.
2023-ஆம் ஆண்டில், கத்தோலிக்கத் தலத்திருஅவைகளின் செயல்பாடுகளால் நாட்டின் பன்னிரெண்டு மாநிலங்களில், ஒன்பது மாநிலங்களிலுள்ள ஏறக்குறைய 60 இலட்ச மக்கள் மதவேறுபாடுகள் இன்றி உதவிகளைப் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார் பேராயர் Balestrero
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்