உலக அளவில் கத்தோலிக்கர் மற்றும் தேவ அழைத்தல் விவரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
2022ஆம் ஆண்டின் உலக கத்தோலிக்க புள்ளிவிவரங்கள் தற்போது வெளியிடப்பட்ட 2024ஆண்டின் திருஅவை ஆண்டு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
2021ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டில் உலகில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது 137 கோடியே 60 இலட்சத்திலிருந்து, 139 கோடியாக உலக அளவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஆப்ரிக்காவில் மட்டுமே கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகும்வகையில் அதிகரித்துள்ளதாகக் கூறும் திருஅவை ஆண்டு புத்தகம், இது 3 விழுக்காடு, அதாவது 26 கோடியே 50 இலட்சம் என்பதிலிருந்து 27 கோடியே 30 இலட்சமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
ஐரோப்பாவிலும் ஓசியானிவிலும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஏற்றமும் இறக்கமும் இன்றி அதே அளவில் தொடர்வதாகவும், அமெரிக்கக் கண்டத்தில் 0.9 விழுக்காடும், ஆசியாவில் 0.6 விழுக்காடும் அதிகரித்துள்ளதாகவும், இது இவ்விரு கண்டங்களின் மொத்த மக்கள்தொகைப் பெருக்கத்தோடு இணங்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021லிருந்து 2022ஆம் ஆண்டில் உலகில் ஆயர்களின் எண்ணிக்கை 0.25 விழுக்காடு, அதாவது 5340 என்பதிலிருந்து 5353 ஆக உயர்ந்துள்ளது.
தேவ அழைத்தல்களின் எண்ணிக்கையும் குறைந்துவருவதைச் சுட்டிக்காட்டும் இந்த ஆண்டு புத்தகம், 2021ஆம் ஆண்டில் உலகில் 4 இலட்சத்து 7ஆயிரத்து 872 அருள்பணியாளர்கள் இருக்க, இது 2022ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 730 ஆக, அதாவது 142 குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கிறது.
உலக அளவில் ஆண் மற்றும் பெண் துறவியரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இந்த ஆண்டு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் ஆண் துறவிகளின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 774ஆக இருந்தது, 2022ஆம் ஆண்டில் 49 ஆயிரத்து 414 ஆக குறைந்துள்ளதாகவும், பெண்துறவிகளின் எண்ணிக்கையும் 6 இலட்சத்து எட்டாயிரத்து 958 என்பதிலிருந்து 5 இலட்சத்து 99 ஆயிரத்து 228 ஆக சரிந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்