தேடுதல்

பேராயர் கபிரியேலே காச்சா பேராயர் கபிரியேலே காச்சா 

உலக வளர்ச்சித் திட்டங்களில் ஆப்ரிக்காவின் இடம் அங்கீகரிக்கப்பட

ஆப்ரிக்க நாடுகளின் வளங்களை சுரண்ட சில நாடுகள் முயன்று வருவது மிகவும் கவலைக்குரியது. புதுவகையான காலனி ஆதிக்கம் இடம்பெற்று வருகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அனைத்துலக அளவில் அமைதியையும் பாதுகாப்பையும் எவ்விதம் தொடர்ந்து கொண்டிருப்பது என்பது குறித்த ஐ.நா. நிறுவனக் கூட்டத்தில், ஆப்ரிக்க நாடுகளின் இடத்தைப் பலப்படுத்துவது குறித்து திருப்பீடத்தின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் பேராயர் கபிரியேலே காச்சா.

உலக அளவிலான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்ட சவால்களில் ஆப்ரிக்க நாடுகளின் இடம் குறித்து ஐ.நா.வில் உரையாற்றிய ஐ.நா. நிறுவனத்திற்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் காச்சா அவர்கள், மனித வளத்தையும் இயற்கை வளத்தையும் பெருமளவில் கொண்டுள்ள ஆப்ரிக்க கண்டம், கலாச்சார பாரம்பரியம் உள்ளதாகவும் இருக்கும் நிலையிலும், மோதல்கள், பயங்கரவாதம், காலநிலை மாற்றம், பொருளாதர முன்னேற்றத் தடை, ஏழ்மை ஒழிப்பு தடைகள் என பல்வேறு கூறுகளால் சவால்களை சந்தித்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சவால்களின் காரணமாக ஆப்ரிக்காவின் முன்னேற்றத் திட்டங்களும் வளர்ச்சியும் பெருமளவில்  பாதிக்கப்பட்டு துன்பங்களே பரவிக் கிடக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார் திருப்பீட பிரதிநிதி பேராயர் காச்சா.

பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சவால்களில் ஆப்ரிக்காவின் இடம் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதில் திருப்பீடம் இரு கருத்துக்களை முன்வைக்க விரும்புவதாக உரைத்த பேராயர், சவால்களை எதிர்கொள்வதில் ஆப்ரிக்கா அடைந்துள்ள  ஒத்துழைப்பின் வெற்றி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தன் முதல் கருத்தை முன்வைத்தார்.

வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் ஆப்ரிக்க கண்டம் ‘2030க்குள் அனைத்து ஆயுதங்களையும் மௌனப்படுத்தல்’ என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார் பேராயர்.

அமைதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆப்ரிக்க ஒன்றிய அமைப்பின் வெற்றிகளையும் சுட்டிக்காட்டிப் பாராட்டினார் பேராயர் காச்சா.

இரண்டாவதாக, ஆப்ரிக்க நாடுகளின் வளங்களை சுரண்ட சில நாடுகள் முயன்று வருவது மிகவும் கவலைக்குரியது என்பதையும் எடுத்துரைத்த பேராயர், புதுவகையான காலனி ஆதிக்கம் இடம்பெற்று வருவதையும் காணமுடிகிறது என்றார்.

ஒன்றிணைந்த மனித குல வளர்ச்சிக்கு உழைப்பதற்கு ஆப்ரிக்காவிற்கு இருக்கும் உரிமை மதிக்கப்பட்டு, தேவையற்ற தலையீடுகளும், சுரண்டல்களும் தடுக்கப்படுவது உறுதிச் செய்யப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2024, 16:08