திருப்பீடம் முதியோரை, அவர்தம் சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கிறது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருப்பீடம், முதியோர்களுக்கான ஆதரவையும் அவர்களின் சமூகப் பங்களிப்பையும் ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia.
மே 20 முதல் 24 வரை, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் நடைபெற்றுவரும் முதியோர்களுக்கான திறந்தநிலை பணிக்குழுவின் 14-வது அமர்வில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் பேராயர் Caccia.
மே 20, இத்திங்களன்று, வெளியிட்ட அறிக்கையில், முதலில் நகரத்திலும் அல்லது கிராமப்புற சூழலிலும் சமூக வாழ்வில் பங்கேற்கும் திறனில் வயதானவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்த பேராயர் Caccia அவர்கள், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் கிடைப்பது, மளிகை பொருட்கள், நல வசதிகள், பொது சேவைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஆன்மிக பராமரிப்பு யாவும் இந்த காரணிகளில் அடங்கும் என்றுக் குறிப்பிட்டார்.
சமூகங்கள் எவ்வாறு உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் வீட்டுத் திட்டங்களை சிறப்பாக மேம்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டிய பேராயர் Caccia அவர்கள், இது வயதானவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மற்றவர்களுடன், குறிப்பாக இளைய தலைமுறையினருடன் தொடர்புகொள்வதற்கும் உதவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
குடும்பங்கள் மற்றும் முறைசாரா பராமரிப்பாளர்கள் எவ்வாறு முதியோர்களுக்கு அவர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் வீடுகளை இடமாற்றம் செய்யாமல் மாற்றியமைக்க உதவ முடியும் என்பதற்கு தலைமுறைகளுக்கிடையேயான வீடமைப்புத் திட்டங்கள் ஒரு எடுத்துக்காட்டு என்பதையும் எடுத்துக்காட்டினார் பேராயர் Caccia.
பொதுவாழ்க்கை மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்குச் சொந்தம் என்ற பகிரப்பட்ட வாழ்க்கைப் பிணைப்புகள் வழிகாட்ட வேண்டும் என்று குறிப்பிட்ட பேராயர் Caccia அவர்கள், தாத்தா பாட்டி தங்கள் சொந்த அனுபவங்களையும் நுண்ணறிவுகளையும் தங்கள் பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.
இயற்கை மரணம் வரை மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அனைத்து நபர்களும் சமமாக மதிக்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு 'கனிவிரக்கமுள்ள துணை' தேவை என்பதை சுட்டிக்காட்டிய பேராயர் Caccia அவர்கள், ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையின் மிக நுட்பமான தருணங்களில் கூட, அவர்களுடன் இணைந்து அக்கறையுடன் இருப்பதை உணர வைக்கும் முயற்சிகளை திருப்பீடம் ஊக்குவிக்கிறது என்றும் கூறினார்.
இறுதியாக, மனித குடும்பத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களாக முதியவர்களின் இருப்பு மற்றும் அவர்களின் கண்ணோட்டங்கள் மதிக்கப்படும் சமூகங்களை உருவாக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார் பேராயர் Caccia.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்