இராணுவத் தீர்வுகள் போர்களை முடிவுக்குக் கொண்டுவராது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
போர்களை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் இராணுவ தீர்வுகள் பயன்தர வாய்ப்பில்லை ஆதலால், வேறு பாதைகளைத் தேடவேண்டும் என்றும், அணு ஆயுதங்களின் ஆபத்துகள் மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன என்றும் எச்சரித்துள்ளார் பேராயர் Gabriele Caccia.
வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நீண்டதொரு நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ள ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia அவர்கள், போர்களை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதிக்கான பாதைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் போர்களைக் கருத்தில் கொண்டு, உலகளாவியத் தூதரக உறவுகளுக்குள்ளும் கூட, விரிவாக்கத்தை எளிதாக்கும் மற்றும் இன்னும் பயன்படுத்தப்படாத வழிமுறைகள் ஏதாகிலும் உள்ளதா என்றும் இந்த நேர்காணலில் கேள்வி எழுப்பியுள்ளார் பேராயர் Caccia.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது ஆயுத வர்த்தகத்திற்காக அதிகம் செலவிடப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Caccia அவர்கள், அத்தகைய முதலீடுகள் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் மோதல்களைத் தடுக்கும் திட்டங்களுக்குச் சிறப்பாகச் செலவிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நம்பிக்கை மற்றும் தூதரக உறவுக்கான கட்டமைப்புகள் மற்றும் ஒத்துழைப்பை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து கூறியுள்ள பேராயர் Caccia அவர்கள், அணு ஆயுதங்களின் ஆபத்துகள் குறித்துத் திருஅவை கொண்டுள்ள பெரும் அக்கறையையும் அந்நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்