தேடுதல்

வத்திக்கான் கோவில் வெளிப்புறம் வத்திக்கான் கோவில் வெளிப்புறம்  (Vatican Media)

யூபிலி ஆண்டில் வழங்கப்படும் நிறைபேறுபலன்கள் குறித்து அறிக்கை

கடவுளின் இரக்கம் எல்லைகளற்றது என்பதை மீண்டும் கண்டுகொள்வதற்கு யூபிலி ஆண்டின் நிறைபேறுபலன்கள் உதவும். நிறைபேறுபலன்கள் என்பவை யூபிலியின் அருள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2025ஆம் ஆண்டு திருஅவையில் சிறப்பிக்கப்படும் யூபிலி ஆண்டில் வழங்கப்படும் நிறைபேறுபலன்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது Apostolic Penitentiary எனப்படும் திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை.

நிறைபேறு பலன்களை வழங்குவது குறித்த விவகாரங்களில் முழு அதிகாரம் பெற்றுள்ள இந்த துறை வெளியிட்டுள்ள புதிய ஆணையின்படி, யூபிலி ஆண்டில் பல்வேறு நிறைபேறுபலன்களைப் பெறுவதற்குரிய வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நம்பிக்கையின் திருப்பயணியாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் நடைபோட வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்புக்கேற்ப, ஒவ்வொரு கிறிஸ்தவரும் யூபிலி ஆண்டின் சிறப்புக் கொடையான நிறைபேறுபலன்களை பெறுவதற்குரிய சிறப்பு பக்தி முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என இத்திருப்பீடத் துறையின் அறிக்கைக் கூறுகிறது.

கடவுளின் இரக்கம் எல்லைகளற்றது என்பதை மீண்டும் கண்டுகொள்வதற்கு யூபிலி ஆண்டின் நிறைபேறுபலன்கள் உதவும் என்ற திருத்தந்தையின் அறிவிப்பையும் மேற்கோள் காட்டும் திருஅவையின் மனசாட்சி துறை, நிறைபேறுபலன்கள் என்பவை யூபிலியின் அருள் எனவும் கூறியுள்ளது.

யூபிலி ஆண்டின் நிறைபேறு பலன்களை பெறுவதற்குரிய மூன்று வழிகளாக, யூபிலி கொண்டாடங்கள் இடம்பெறும் புனித தலங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்ளல்,  புனித இடங்களுக்கு பக்தியுடன் சென்று சந்தித்தல், இரக்கத்தின் மற்றும் நோன்பின் நடவடிக்கைகள் என சுட்டிக்காட்டுகிறது இத்திருப்பீடத்துறை.

யூபிலி கொண்டாட்டங்கள் இடம்பெறும் முக்கிய தலங்களாக, உரோம் நகரிலுள்ள நான்கு பெரிய பெருங்கோவில்கள், எருசலேமில் இயேசுவின் கல்லறை இருக்கும் பேராலயம், பெத்லகேமின் இயேசு பிறந்த இடத்தின் பேராலயம், நாசரேத்தூரில் உள்ள மங்களவார்த்தை செப பேராலயம், மற்றும் தலத்திருஅவைகளில் ஆயர்களால் குறிக்கப்பட்டுள்ள புனித தலங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த புண்ணிய தலங்களில் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்றபின் இந்த புண்ணியதலங்களில் திருப்பலியிலோ, திருவழிபாட்டுச் சடங்குகளிலோ, சிலுவைப்பாதை, செபமாலை போன்ற பக்தி முயற்சிகளிலோ பங்குபெறுபவர்களுக்கு இந்த பரிபூரண பலன் கிட்டும்.

யூபிலி ஆண்டில் சென்று தரிசித்து பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு, நிறைபேறுபலன்களை பெறவல்ல புனித இடங்களையும் இந்த திருப்பீடத்துறை கோடிட்டுக் காட்டியுள்ளது.

உதவித் தேவைப்படுவோரை சென்று சந்தித்து உதவுதல், ஏழைகளுக்கு உதவுதல், மத மற்றும் பிறரன்பு அமைப்புகளுக்கு ஆதரவளித்தல், சுயவிருப்பப் பணியாளர்களாகச் சேவையாற்றுதல் போன்றவைகளையும் முன்மொழிந்துள்ளது திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2024, 14:42