தேடுதல்

பறவைகலின் உறைவிடங்கள் பறவைகலின் உறைவிடங்கள்  (AFP or licensors)

அனைத்துப் படைப்புக்களும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளன

காடுகள் என்பவை சூழல் அமைப்பின் உயிர்நாடி, பொருளாதார வாழ்வின் ஆதாரம், கார்பன்-டை-ஆக்ஸடை உறிஞ்சுபவை, பல்லுயிரியத்தின் பாதுகாப்பிடம், நலவாழ்வின் முக்கியக் கூறு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இறைவனின் படைப்பை மதித்து அக்கறையுடன் நடத்தவேண்டிய கடமை  படைப்புகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் உள்ளதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எப்போதும் வலியுறுத்துவருகிறார் என ஐ.நா. கூட்டம் ஒன்றில் எடுத்துரைத்தார் பேராயர் கபிரியேலே காச்சா.

காடுகள் குறித்த ஐ.நா. அவையின் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் காச்சா அவர்கள், ஒழுக்கரீதி மதிப்பீடுகளின் ஒன்றிணைக்கும் கொள்கைகளுடன் பொதுநலனை நோக்கமாகக் கொண்டுச் செயல்படுவது என்பது, ஒன்றிணைந்த சுற்றுச்சூழலுக்கான பணியுடன் பிரிக்க முடியாதது என்பதை எடுத்துரைத்தார்.

அனைத்துப் படைப்புக்களும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளன என்பதை மனதில் கொண்டவர்களாக, நாம் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை ஒன்றிணைந்து அணுகவேண்டும் என்ற அழைப்பை விடுத்த பேராயர், காடுகள் என்பவை சூழல் அமைப்பின் உயிர்நாடி, பொருளாதார வாழ்விற்கான ஆதாரம், கார்பன் டை ஆக்ஸடை உறிஞ்சுபவைகள், பல்லுயிரியத்தின் பாதுகாப்பிடங்கள், சமூக நலவாழ்வின் முக்கியக் கூறுகள் என்பவைகளை நினைவில் கொண்டதாக அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.

மனித நலவாழ்விற்கான அக்கறையிலிருந்து சுற்றுச்சூழல் அக்கறை எந்நாளும் பிரித்துப் பார்க்க முடியாதது என்ற திருப்பீடப் பிரதிநிதி பேராயர் காச்சா அவர்கள், பல்லுயிர்களின் பாதுகாப்பிடமான காடுகள், பலரின் வாழ்க்கைக்கு உதவுவதுடன், சுத்தக் குடிநீர், காலநிலை மாற்றக் கட்டுப்பாடு ஆகியவைகள் வழியாக உலக மக்கள் அனைவருக்கும் உதவி வருவதையும் சுட்டிக்காட்டினார்.

காடுகளைச் சார்ந்து வாழும் மக்களின் நலன் காக்கப்படவேண்டும், வருங்காலத் தலைமுறையின் நலன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும், உலகாயுதப்போக்குகளின் மிதமிஞ்சல்கள், நிலங்கள் சுயநலப்போக்குடன் பயன்படுத்தப்படல், சுற்றுச்சூழல் அக்கறையின்றி செயல்படுதல், சுற்றுச்சூழல் மாசுக்கேடு அதிகரித்தல், பாலைவனமாதல் போன்றவை குறித்தும் திருப்பீடத்தின் அக்கறையை ஐ.நா.கூட்டத்தில் பகிர்ந்தார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2024, 16:25