தேடுதல்

கர்தினால் மைக்கல் செர்னி கர்தினால் மைக்கல் செர்னி 

கடற்பணியாளர்களின் வாழ்வு பல இழப்புகளைச் சார்ந்ததாக இருக்கிறது

கடற்பணியாளர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் வாழ்க்கையில் பல இனிமையான தருணங்களை இழக்கின்றனர்.

ஜெயந்த் ராயன், வத்திக்கான் 

கடற்பணியாளர்கள் கடலின் எல்லையற்ற அழகை அனுபவிப்பது மட்டுமல்லாமல், தங்கள் உடல், ஆன்மிகம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளையும் அனுபவிக்கிறார்கள் என்று கூறுகிறார், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மைக்கல் செர்னி.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று திருஅவையால் கடல் ஞாயிறு சிறப்பிக்கப்படுவதையொட்டி செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கும் கர்தினால் செர்னி அவர்கள், அநீதிகள், சுரண்டல்கள் மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றை கடற்பணியாளர்கள் அவர்களுடைய பணிகளில் எதிர்கொள்வதாகவும், பல இலட்சம் மக்கள் பணியாற்றும் இத்துறையில் அவர்களுடைய மறைமுகப் பணிகள் மூலம் நம் அன்றாட தேவைகள் நம்மை வந்தடைகின்றன என்றும் கூறினார்.

கடற்பணியாளர்களின் வாழ்வு பல இழப்புகளைச் சார்ந்ததாக இருக்கிறது என்று கூறிய கர்தினால் அவர்கள், அவர்களுடைய குடும்பம் மற்றும் வாழும் நிலத்தைப் பிரிந்து, மாதங்கள் மற்றும் ஆண்டுகளாகப் பணியாற்றுவதாகவும், இதனால் கடற்பணியாளர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் வாழ்க்கையில் பல இனிமையான தருணங்களை இழப்பதாகவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க திருஅவையின் அகில உலக  நிறுவனமான ஸ்டெல்லா மாரிஸ் என்ற  அமைப்பு, கடலோடிகள், பிற கடல்சார் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மேய்ப்புப்பணி சார்ந்த உதவிகளை வழங்கிவருவதை நினைவு கூர்ந்த கர்தினால் செர்னி அவர்கள், கடல் சார்ந்த இவ்விறைப்பணியானது, விளிம்பு நிலையில் உள்ளவர்களை மையத்திற்கு அழைத்து வருதல்; கடலைச் சார்ந்து வாழும் மக்களை சந்தித்தல் மற்றும் அவர்களுக்காக இறைவேண்டல் செய்தல்; பணியாளர்களின் பொருளாதார மற்றும் ஆன்மிக நிலைகளை மேம்படுத்துதல்; அவர்களின்  உரிமைகளுக்காக வாதிடுதல்; சர்வதேச உறவுகள் மற்றும் கொள்கைகளை வலுப்படுத்தல் போன்ற பல பணிகளைச் செய்துவருவதாகத் தெரிவித்தார்.

திருஅவை வரலாற்றில் கடலோடு தொடர்புடைய இரு நிகழ்வுகளைத் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கர்தினால் அவர்கள், திருத்தூதர் புனித பவுலடியாரின் நற்செய்திப் பணியானது கடல் பயணத்தைச் சார்ந்து அமைந்திருந்ததாகவும்,  துறைமுக நகரமான கொரிந்தில் அவருக்கு பெரிய ஆதரவு இருந்ததையும், அப்புதிய கிறிஸ்தவர்கள் விரைவில் தங்களுக்குள் பிளவுண்டதையும், அவர்களுக்கு  எழுதிய முதல் திருமடலில் பேசியுள்ள புனித பவுலடியாரை மேற்கோள் காட்டி, இன்றைய திருஅவை வேறுபட்ட மக்களிடையே மட்டுமல்லாமல்,  பிரிவினைகளையும் பிளவுகளையும் அனுபவிக்கும் மக்களிடையே ஒற்றுமைக்காக உழைக்கவேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவ மிகப்பெரும் வழிமுறையாக கடல் அமைந்திருந்ததை நினைவு கூர்ந்த கர்தினால் செர்னி அவர்கள், கிறிஸ்துவின் நற்செய்தியை திருத்தூதர்களிடமிருந்தும், மறைத்தூதுவர்கள் அருளுரையிலிருந்தும் முதன் முதலில் பெற்றுக்கொண்ட கடலோரச் சமூகங்களின் வழியாக நாமும் உத்வேகம் பெறமுடியும் என்றும், வசதிகளை மட்டுமே விரும்பினால், வாழ்க்கையில் வரும் வாய்ப்புகளுக்கு நாம் திறந்த மனதுடன் பதிலளிக்க முடியாது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2024, 14:19