தேடுதல்

சுவிஸ் மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் கர்தினால் பரோலின் சுவிஸ் மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் கர்தினால் பரோலின் 

நீதியான அமைதியைப் பெற அமைதிப் பேச்சுவார்த்தையே வழி

உக்ரைனின் போர் பகுதிகளிலிருந்து குழந்தைகளை வெளியேற்றவும், போர்க்கைதிகளின் விடுதலைக்கும், காயமுற்ற போர்வீரர்களுக்கு சிகிச்சை வழங்கவும் முயலும் வத்திக்கான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உண்மையான, நிலையான, நீதியான அமைதியைப் பெறவேண்டுமெனில் போரிடும் துருப்புக்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும் என்ற திருத்தந்தையின் வார்த்தைகளை, உக்ரைனுக்கான அமைதி குறித்த உயர்மட்ட கருத்தரங்கில் எடுத்துரைத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.   

சுவிட்சர்லாந்தில் அண்மையில் இடம்பெற்ற, உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்த உயர்மட்ட நிறையமர்வுக் கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், அமைதியைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தையே ஒரேவழி என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியதுடன், உக்ரைன் மற்றும் இரஷ்யத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வத்திக்கான், இருதரப்பினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பார்வையாளர் என்ற தகுதியுடன் வத்திக்கான் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையும் ஆற்றிய திருப்பீடச் செயலர், ஆக்ரமிப்பிலிருந்து தன்னை காத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் உக்ரைன் நாடு, அமைதிக்கான அரசியல் மட்ட முயற்சிகளையும் தொடர்ந்து வருவது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

உக்ரைனில் இடம்பெற்றுவரும் மனிதகுல பேரழிவு குறித்து திருப்பீடம் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளதாகவும், போர் பகுதிகளிலிருந்து குழந்தைகளை வெளியேற்றவும், போர்க்கைதிகளின் விடுதலைக்கும், காயமுற்ற போர்வீரர்கள் மற்றும் பொதுமக்களை சிகிச்சைக்கென வெளியேக் கொணர்வதற்கும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் திருப்பீடம் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

உக்ரைனில் அமைதி குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் வத்திக்கான் சார்பில் இடம்பெற்ற குழுவில் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், சுவிட்சர்லாந்திற்கான திருப்பீடத் தூதுவர் Martin Krebs, திருப்பீடத்தூதரக அதிகாரி பேராயர் Paul Butnaru, ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர், மற்றும் உக்ரைன் அரசுத் தலைவரின் அழைப்பின் பேரில் திருப்பீடக்குழு இந்த உயர் அமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2024, 14:37