வாடகைத் தாய் முறையை ஒழிக்க திருப்பீடம் முயற்சி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீடத் துறையின் துணைச் செயலாளர் Gabriella Gambino அவர்கள், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் வாடகைத் தாய் முறையை ஒழிப்பதை மையமாகக் கொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார் என்றும், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் பாதுகாக்க அனைத்துலகத் திட்டமிடலை வலியுறுத்தினார் என்றும் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18 இச்செவ்வாயன்று, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நிகழ்ந்த இந்த ஒருநாள் கருத்தரங்கம், "என்ன விலை? வாடகைத்தாய் முறையை ஒழிக்க: பெண்கள் மற்றும் குழந்தைகளை சுரண்டுவதையும் பண்டமாக்குவதையும் தடுப்பது" என்பதை மையக்கருத்தாக கொண்டிருந்தது என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் தொடக்கவுரை ஆற்றிய Gambino அவர்கள், வாடகைத் தாய் முறையை ஒழிப்பதில் அனைத்துலகச் சமூகத்தின் பதிலின் அவசரத்தை பிரதிபலிப்பதாக இந்தக் கருத்தரங்கு அமைந்துள்ளது என்றும், இதில் பாதிக்கப்பட்டவர்களின் மாண்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகளின் உலகளாவியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பொதுவான உறுதிப்பாட்டின் சாத்தியத்தை ஆழமாக்குவது அவசியம் என்றும் எடுத்துக்காட்டினார்.
பிறப்பை ஒரு ஆள்மாறான செயல்முறையாக மாற்றுவது முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளை பண்டமாக்குதல் மற்றும் சுரண்டுதல் வரை வாடகைத் தாய் முறையுடன் தொடர்புடைய பல பிரச்சனைகளையும் நினைவுகூர்ந்த Gambino, இது அடிப்படை மனித உறவுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு வடிவமாகும் என்றும், இது பெண் மற்றும் குழந்தையின் அடையாளத்தையும் வாழ்க்கையையும் என்றென்றும் பாதிக்கும் என்றும் விளக்கினார்.
இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் தூதரக அதிகாரிகள் குழு ஒன்றிற்கு ஆற்றிய உரையில், வாடகைத் தாய் முறை என்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் மாண்பு மற்றும் உரிமைகளை கடுமையாக மீறுவதாகும், மேலும் அனைத்துலகச் சமூகம், அனைத்து வகையான வாடகைத் தாய் முறைகளுக்கும் முழுமையான தடையை ஏற்படுத்துவதன் அவசரத்தை சிந்திக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்